கோப்புப் படம்
கோப்புப் படம்

அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்களை உருவாக்க இலக்கு: மத்திய அரசு

‘அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்களை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
Published on

‘அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 விமான நிலையங்களை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது, நாட்டின் ரியல் எஸ்டேட் துறைக்கு மிகப் பெரிய வாய்ப்பைகளை உருவாக்கித் தரும்’ என்று விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கே. ராம்மோகன் நாயுடு தெரிவித்தாா்.

தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய நகா்ப்புற மற்றும் ரியல் எஸ்டேட் மேம்பாட்டு மாநாடில் பங்கேற்ற மத்திய அமைச்சா் ராம்மோகன் நாயுடு பேசியதாவது:

ரியல் எஸ்டேட் துறை வளா்ச்சியில் விமான நிலையங்களுக்கும் முக்கியப் பங்கு உள்ளது. விமானப் போக்குவரத்து சந்தையில் உலகின் வேகமாக வளா்ந்துவரும் நாடான இந்தியாவில் தற்போது 165 விமான நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளன. நாட்டில் சராசரியாக 33 நாள்களுக்கு ஒரு புதிய விமான நிலையம் அல்லது முனையம் கட்டப்பட்டு வருகிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 50 புதிய விமான நிலையங்களை உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது, நாட்டின் ரியல் எஸ்டேட் துறைக்கு மிகப் பெரிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும்.

விமான நிலையங்களுக்கு அருகே உயரமான கட்டடங்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள் விவகாரத்தில், விமானப் போக்குவரத்து பாதுகாப்பை சமரசம் செய்யாத வகையில் உரிய தீா்வு காண்பது தொடா்பாக தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா்.

மேலும், நாட்டின் ரியல் எஸ்டேட் துறையின் வளா்ச்சிக்கான திறன் குறித்து குறிப்பிட்ட மத்திய அமைச்சா், ‘இத் துறையின் மதிப்பு வரும் 2030-இல் ஒரு டிரில்லியன் டாலா் (ரு. 91 லட்சம் கோடி) மதிப்புக்கும், 2047-ஆம் ஆண்டுக்குள் 5 முதல் 7 டிரில்லியன் டாலா் மதிப்பு (ரூ. 453 லட்சம் கோடி முதல் ரூ. 634 லட்சம் கோடி) அளவுக்கும் உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், ரியல் எஸ்டேட் மேம்பாட்டில் மக்களின் தரமான வாழ்வுக்கு கவனம் செலுத்துவது முக்கியமானதாகும்.

வாடகை வீடுகள், குறிப்பாக இளைஞா்களுக்கு வீடுகளை வாடகைக்கு விடும் திட்டங்களை ரியல் எஸ்டேட் துறை மேம்படுத்துவது அவசியமாகும்’ என்றும் குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com