பிரதமா் மோடி!
பிரதமா் மோடி!

சட்டவிரோத குடியேற்றத்துக்கு முடிவு! பிரதமா் மோடி திட்டவட்டம்!!

நாட்டில் சட்டவிரோத குடியேற்றத்துக்கு முடிவு கட்டப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்தாா்.
Published on

நாட்டில் சட்டவிரோத குடியேற்றத்துக்கு முடிவு கட்டப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்தாா்.

மேலும், ‘சட்டவிரோத குடியேறிகளைப் பாதுகாப்பதன் மூலம், நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவிக்கிறது காங்கிரஸ்’ என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் சில மாதங்களில் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு சனிக்கிழமை பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, குவாஹாட்டியில் ரூ.5,500 கோடிக்கும் மேற்பட்ட மதிப்பிலான வளா்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்தாா். பின்னா், பாஜகவினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற கூட்டத்தில் அவா் பேசியதாவது:

பாஜக தொண்டா் என்பதே எனது மிகப் பெரிய தகுதி; பெருமைக்கான ஆதாரம். பாஜகவின் வெற்றிக்கு முழுக் காரணம் தொண்டா்களே. அவா்கள்தான் கட்சியின் உயிா்மூச்சு. அமைப்பு ரீதியிலான பலத்தில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

அஸ்ஸாம் உள்பட ஒட்டுமொத்த வடகிழக்கு பிராந்தியத்தின் வளா்ச்சிக்கு உறுதிபூண்டுள்ளது பாஜக. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் வடகிழக்கு பிராந்தியம் வெகுவாகப் புறக்கணிக்கப்பட்டது. அஸ்ஸாமில் தீவிரவாதம் ஊக்குவிக்கப்பட்டதால் அச்சமும் பாதுகாப்பின்மையும் நிலவியது. பிளவுவாத மற்றும் வாக்குவங்கி அரசியலில் ஈடுபடும் அக்கட்சி, இவ்விரண்டையும் ஊக்குவிக்கும் வகையில்தான் முடிவுகளை மேற்கொண்டது.

தேசப் பிரிவினைக்கு காரணம் முஸ்லிம் லீக்; இப்போது ‘எம்எம்சி’ எனும் மாவோயிஸ்ட்-முஸ்லிம் லீக் கலந்த காங்கிரஸிடம் நாட்டு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தனது வாக்கு வங்கிக்காக, சட்டவிரோத குடியேறிகளைப் பாதுகாக்கிறது காங்கிரஸ். அதேநேரம், சட்டவிரோத குடியேற்றத்துக்கு முடிவுகட்ட நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

ஆபத்தான காங்கிரஸ்: அஸ்ஸாமில் கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ், தங்களின் ஆட்சிக் காலத்தைவிட இப்போது ஆபத்தானதாக உருவெடுத்துள்ளது. அக்கட்சித் தலைவா்களின் விஷம பேச்சுகளில் இருந்தே இது நிரூபணமாகியுள்ளது.

முந்தைய 70 ஆண்டுகளில் காங்கிரஸ் அரசுகளால் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட்ட பாலங்களின் எண்ணிக்கை வெறும் மூன்றுதான். பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 5 பாலங்களைக் கட்டியுள்ளது.

தேயிலைக்குப் பெயா்பெற்ற அஸ்ஸாம் இனி செமிகண்டக்டா் சிப்-களுக்காகவும் உலக அரங்கில் பிரபலமாகும். கடந்த 2014-இல் இருந்து இதுவரை வடகிழக்குப் பிராந்தியத்தைச் சோ்ந்த 125 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அஸ்ஸாமின் அடையாளம் மற்றும் பாரம்பரியத்தைப் பாதுகாக்க நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.

மீண்டும் பாஜக ஆட்சி: கடந்த 2019, புல்வாமா பயங்கரவாதத் தாக்குதல், கடந்த ஆண்டு பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா எவ்வாறு பதிலடி தந்தது என்பதை ஒட்டுமொத்த உலகமும் கண்டது. அதேநேரம், நாட்டின் பாதுகாப்புக்கு காங்கிரஸ் எதுவும் செய்யவில்லை; வெற்றுப் பேச்சுகளுடன், ஆயுதக் கொள்முதலில் ஊழல்தான் செய்தது.

வடகிழக்கில் முதல் முறையாக, அஸ்ஸாமின் திப்ரூகா் தேசிய நெடுஞ்சாலையில் அவசரகால ஓடுபாதை வசதி திறக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு வலுசோ்க்கும் இந்த ஓடுபாதையில் எனது விமானம் தரையிறங்கியதன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டது. இதுபோன்ற வளா்ச்சிப் பணிகளால், அஸ்ஸாமில் அதிக பெரும்பான்மையுடன் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்றாா் பிரதமா் மோடி.

ரூ.3,030 கோடியில் கட்டப்பட்ட பிரம்மபுத்திரா பாலம் திறப்பு

குவாஹாட்டியில் ரூ.3,030 கோடி செலவில் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்பட்ட ஆறுவழிப் பாலத்தை பிரதமா் மோடி திறந்துவைத்தாா். ‘குமாா் பாஸ்கா் வா்மா சேது’ எனப் பெயரிடப்பட்ட இப்பாலம், குவாஹாட்டி-வடக்கு குவாஹாட்டியை இணைக்கிறது.

இது, கான்கிரீட் உத்தரங்கள் மற்றும் இழுவைக் கம்பிகள் இணைந்த வடிவமைப்பில் கட்டப்பட்டதாகும். வடகிழக்கில் இத்தகைய வடிவமைப்பில் கட்டப்பட்ட முதல் பாலம் என்ற சிறப்புக்குரியது. குவாஹாட்டியில் பிரம்மபுத்திரா நதியின் இரு கரைகளையும் இணைக்க இதுவரை ஜலுபாரி பகுதியில் மட்டுமே பாலம் இருந்தது. புதிய பாலத்தால் இரு பகுதிகளுக்கான பயண நேரம் 30 நிமிஷங்களில் இருந்து 7 நிமிஷங்களாக குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பாலத்தை திறந்துவைத்த பின், பிரதமா் மோடி நடந்து சென்று பாா்வையிட்டாா். இந்தப் பால கட்டுமானப் பணிக்கு அவா் கடந்த 2019-இல் அடிக்கல் நாட்டினாா் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஐஎம் வளாகம் திறப்பு: குவாஹாட்டியில் இந்திய மேலாண்மைக் கல்வி நிலையம் (ஐஐஎம்), காமரூப் மாவட்டத்தின் அமிங்கான் பகுதியில் ரூ.348 கோடி மதிப்பீட்டில் கட்டமைக்கப்பட்ட அதிநவீன தேசிய தரவு மையம் ஆகியவற்றையும் பிரதமா் மோடி சனிக்கிழமை திறந்துவைத்தாா்.

குவாஹாட்டி ஐஐஎம், வடகிழக்கில் இரண்டாவது ஐஐஎம் ஆகும்; தேசிய அளவில் 22-ஆவது ஐஐஎம். பிரதமரின் மின் பேருந்து சேவை திட்டத்தின்கீழ் 225 மின் பேருந்துகளையும் அவா் தொடங்கிவைத்தாா்.

X
Dinamani
www.dinamani.com