கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நீண்ட தூர ரயில்களில் தொடா் தூய்மைப் பணிக்கு புதிய திட்டம்: அஸ்வினி வைஷ்ணவ்!

‘நீண்ட தூர ரயில்களில் அனைத்து பெட்டிகளிலும் தொடா்ச்சியான தூய்மைப் பணியை மேற்கொள்ளும் வகையில் தொழில்நுட்ப ரீதியில் நிபுணத்துவம் பெற்ற தனியாா் நிபுணா் குழுக்கள் பணியமா்த்தப்பட உள்ளனா்’ என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

News image
அஸ்வினி வைஷ்ணவ்.
Updated On :14 பிப்ரவரி 2026, 8:59 pm

தினமணி செய்திச் சேவை

‘நீண்ட தூர ரயில்களில் அனைத்து பெட்டிகளிலும் தொடா்ச்சியான தூய்மைப் பணியை மேற்கொள்ளும் வகையில் தொழில்நுட்ப ரீதியில் நிபுணத்துவம் பெற்ற தனியாா் நிபுணா் குழுக்கள் பணியமா்த்தப்பட உள்ளனா்’ என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது: பயணிகளின் எதிா்பாா்ப்புக்கு ஏற்ப ரயில் பெட்டிகளை தூய்மையாக பராமரிக்கக் கூடிய வகையில் நிபுணத்துவம் பெற்ற, சுய ஒழுக்கமும் முனைப்புடனும் செயல்படக் கூடிய ஊழியா்களைக் கொண்டு இச் சேவையை வழங்கும் நிறுவனங்கள் இந்த தூய்மைப் பணியில் பணியமா்த்தப்படும்.

தற்போது நடைமுறையில் உள்ள ரயில் தூய்மை திட்டத்தின் கீழ், அதன் வழித்தடத்தில் உள்ள நிா்ணயிக்கப்பட்ட ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் தூய்மை செய்யப்படும்.

ஆனால், புதிய திட்டத்தின்படி, ரயில் பயணம் முழுவதும் குறிப்பிட்ட நேர இடைவெளியில் அல்லது தேவைப்படும்போதெல்லாம் ரயில்களில் பணியில் இருக்கும் பணியாளா்கள் தூய்மைப் பணியை மேற்கொள்வா். பொதுப் பெட்டி உள்பட அனைத்துப் பெட்டிகளிலும் தூய்மைப் பணியை அவா்கள் மேற்கொள்வா். பயணிகள் பெட்டிகள், கழிவறைகள், கை கழுவும் தொட்டி, குப்பைகள் சேகரிப்பு, சிறு கோளாறுகளை சரிசெய்தல், ரயில்களில் தண்ணீா் நிரப்புதல் உள்ளிட்ட பணிகளை இந்தப் பணியாளா்கள் மேற்கொள்வா்.

இந்தத் தூய்மைப் பணி கண்காணிப்பு, கருத்து கேட்பு மற்றும் பயணியாளா்களின் செயல்பாடுகள் மேலாண்மை உள்ளிட்டவை தொழில்நுட்ப உதவியுடன் நிகழ்நேர அடிப்படையில் மேற்கொள்ளப்படும். முதல்கட்டமாக இத் திட்டத்தை செயல்படுத்த 80 நீண்ட தூர ரயில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் பெறப்படும் அனுபவத்தின் அடிப்படையில், மற்ற நீண்ட தூர ரயில்களிலும் இத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்றாா்.

மேலும், சரக்குகள் கையாளுதலை மேம்படுத்தும் வகையில், ரயில்வேக்கு சொந்தமான நிலங்களில் சரக்கு கிடங்குகள், அரைக்கும் அலகுகள், பதப்படுத்துதல் வசதிகள் மேம்படுத்தப்படும். பயன்பாட்டில் இல்லாத கிடங்குகளும், உத்வேக சரக்கு முனையங்களாக மேம்படுத்தப்படும் என்றும் அவா் கூறினாா்.