தற்சார்பு இந்தியாவா? டிரம்ப் சார்பு இந்தியாவா..? பிரதமர் மோடி மீது கபில் சிபல் அதிருப்தி!
இந்தியா - அமெரிக்கா இடையேயான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியுறவுக் கொள்கையில் ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் சமரசம் செய்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கபில் சிபல் விமர்சித்தார்.
இந்தியா மீது விதிக்கப்பட்டிருந்த பரஸ்பர வரியை 25 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைப்பதாக அறிவித்த அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25 சதவீத கூடுதல் வரியை ரத்து செய்ய உத்தரவிட்டார். இதைத் தொடா்ந்து, இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் குறித்து இரு நாடுகளின் கூட்டறிக்கை கடந்த பிப்.7-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதில், வெளியுறவுக் கொள்கையில் ஏற்றுக்கொள்ள இயலாத வகையில் அரசு சமரசம் செய்திருப்பதாக கபில் சிபல் விமர்சித்தார். அவர் தெரிவித்திருப்பதாவது:
“பிரதமரிடம் ஒன்றைக் கேட்க வேண்டும், கடந்த 11 ஆண்டுகளில் என்னென்ன வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறீர்கள்? புதிதாக கட்டடங்களை எழுப்புதல் நல்ல விஷயம்தான். சத்தியமேவ ஜெயதே முழக்கத்தையும் நாம் கேட்கிறோம்.. ஆனால், ‘அசத்தியமே..’ கடந்த 11 ஆண்டுகளாக வெற்றி பெற்று வருகிறது.
“‘ஆத்மநிர்பார் (தற்சார்பு)’ என்பதை அவர்கள் தொடர்ந்து சொல்வதைக் கேட்டு வருகிறோம், இப்போது அது, ‘டிரம்ப் பே நிர்பார் (டிரம்ப் சார்பு)’ என்றாகிவிட்டதுபோலும்... தேர்தல்களில் எப்படி வெற்றி பெறுவதென்பதை அறிந்து வைத்துள்ள பாஜகவுக்கு, எப்படி ஆட்சி செய்ய வேண்டுமென்பது தெரியவில்லையே..!”.
அமெரிக்க செயல் ஆணைகள் 14066, 14329 ஆகியவற்றை மேற்கோள் காட்டிப் பேசிய கபில் சிபல் குறிப்பிடும்போது, “இந்தியா ரஷிய எண்ணெயை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கொள்முதல் செய்தால், அமெரிக்காவால் மீண்டும் 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும். டிரம்ப் இந்தியாவைப் பற்றி குறிப்பிட்டு பேசும்போது, ‘அமெரிக்காவின் தேசப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களில் ஒத்துப்போகும் வகையில் இணங்கிச் செயல்பட இந்தியா குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகக்’ குறிப்பிட்டார்.
இந்த அரசிடம் நான் ஒன்றைக் கேட்க வேண்டும், ‘எதற்காக இதற்கு ஒத்துக்கொண்டீர்கள்?’ வரலாற்றில் இப்படி ஒருபோதும் நிகழ்ந்ததேயில்லை! ‘நமது வெளியுறவுக் கொள்கை, பிற நாட்டின் கொள்கையுடன் ஒத்துச் செயல்படும்’ என்பதை நமது பிரதமரும் அரசும் ஒத்துக்கொண்டுள்ளது” என்றார்.
அடுத்த ஐந்தாண்டுகளில் ஐம்பதாயிரம் கோடி டாலர் (500 பில்லியன்) அமெரிக்க பொருள்களையும் அந்நாட்டுச் சேவைகளையும் வாங்க அரசு சம்மதம் தெரிவித்துள்ளதைக் கடுமையாக விமர்சித்த கபில் சிபல், நாடாளுமன்றத்தில் இந்த ஒப்பந்தத்தைப் பற்றி பிரதமர் விவாதிக்கவும் வலியுறுத்திக் கேட்டுகொண்டார்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் கடும் விமர்சனங்களை சுமத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
'Not atmanirbhar but Trump pe nirbhar': Kapil Sibal's swipe at govt over Indo-US deal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

