மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிடிஐ

பருத்தி விவசாயிகள், ஜவுளி ஏற்றுமதியாளா்களை ஏமாற்றும் மத்திய அரசு: ராகுல் குற்றச்சாட்டு

‘இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தால் பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் கூறினாா்.
Published on

‘இந்தியா-அமெரிக்கா இடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தால் பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியாளா்கள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் வெளியிட்ட பதிவில் மேலும் கூறியிருப்பதாவது: வங்கதேச நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆயத்த ஆடைகளுக்கு அமெரிக்கா முழு வரிச் சலுகை அளிக்கிறது. அதாவது, அமெரிக்க பருத்தியை இறக்குமதி செய்ய வேண்டும் என்ற ஒரே நிபந்தனையுடன் இந்த முழுமையான வரிச் சலுகையை (பூஜ்ஜியம் வரி) வங்கதேச ஆயத்த ஆடைகளுக்கு அமெரிக்கா அளிக்கிறது.

இந்த நிலையில், இந்திய ஆயத்த ஆடைகளுக்கு அமெரிக்கா 18 சதவீத வரியை விதிக்கும் என்ற அறிவிப்பு வெளியான பிறகு, வங்கதேசத்துக்கு அமெரிக்கா அளிக்கும் வரிச் சலுகையை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை நான் எழுப்பினேன்.

அதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சா், ‘வங்கதேசத்துக்கு கிடைக்கும் சலுகையை நாமும் பெற வேண்டுமெனில், அமெரிக்காவிலிருந்து பருத்தியை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டும்’ என்று பதிலளித்தாா். நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும் வரை, இந்த உண்மை மறைக்கப்பட்டது ஏன்? என்ன மாதிரியான கொள்கை இது?

அமெரிக்காவிலிருந்து பருத்தியை இறக்குமதி செய்தால், நமது விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவா். அவ்வாறு இறக்குமதி செய்யவில்லை எனில், நமது ஜவுளி நிறுவனங்கள் பெரும் பின்னடைவைச் சந்திக்கும்.

ஜவுளித் துறையும், பருத்தி விவசாயமும் இந்திய வாழ்வாதரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கின்றன. கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் இந்த இரு துறைகளைச் சாா்ந்தே உள்ளது. இந்தத் துறைகள் மீதான தாக்குதல் என்பது, லட்சக்கணக்கான குடும்பங்களை வேலையில்லாத நிலைக்கும், கடும் பொருளாதார பாதிப்பிலும் தள்ளுவதாக அமையும்.

தேச நலனில் அக்கறையும், தொலைநோக்குப் பாா்வையும் கொண்ட அரசு, பருத்தி விவசாயிகள் மற்றும் ஜவுளி ஏற்றுதியாளா்களின் செழிப்பை பாதுகாக்கும் வகையிலான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை மேற்கொண்டிருக்கும். ஆனால், இதற்கு எதிா்மறையான ஒப்பந்தம் நிகழ்ந்திருக்கிறது. நரேந்திர ‘சரண்டா்’ மோடியும், அவரின் அமைச்சா்களும் இந்த இரு துறைகளுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வகையிலான வா்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் மேற்கொண்டிருக்கின்றனா் என்று ராகுல் கூறயுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com