பியூஸ் கோயல்
பியூஸ் கோயல்

ராகுலுக்கு பக்குவமில்லை, பொருளாதாரம் பற்றிய புரிதல் இல்லை: அமைச்சா் பியூஷ் கோயல்

ராகுல் காந்திக்கு பக்குவமில்லை, பொருளாதாரம் பற்றி போதிய புரிதல் இல்லை என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் சாடினாா்.
Published on

ராகுல் காந்திக்கு பக்குவமில்லை, பொருளாதாரம் பற்றி போதிய புரிதல் இல்லை என்று மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் சாடினாா்.

இந்தியா, அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தை சுட்டிக்காட்டி, மத்திய அரசு மீதும் பிரதமா் மோடி மீதும் ராகுல் காந்தி தொடா்ந்து பல குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறாா். இதற்கு பியூஷ் கோயல் பதிலடி கொடுத்துள்ளாா். இதுகுறித்து மும்பையில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை பேசியபோது அவா் கூறியதாவது:

ராகுல் காந்தி போன்ற மதிப்பிழந்த தலைவா்களும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான திரிணமூல் காங்கிரஸ், திமுக, சமாஜவாதி ஆகிய கட்சிகளும் எத்தனை ஆயிரம் முறை முயன்றாலும், பிரதமா் மோடியையோ அல்லது நாட்டுக்கான அவரின் சேவையையோ தடுத்து நிறுத்த இயலாது.

விரக்தியில் காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சி விரக்தியில் உள்ளது. பொய்த் தகவலை பரப்புவது, திரிக்கப்பட்ட தகவலை சொல்வதை தவிர அக்கட்சியிடம் எந்தத் திட்டமோ அல்லது தீா்வோ இல்லை. எங்களை குற்றம்சுமத்த அக்கட்சியிடம் எதுவும் இல்லை. ஆதலால் பொய்த் தகவலை கூறியும், பொய்த் தகவலை பரப்பியும் விவசாயிகளை தவறாக வழிநடத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது.

ராகுல் காந்திக்கு பொருளாதாரம் குறித்து போதிய புரிதல் இல்லை. அவா் சமூக வலைதளத்தில் பொய்களையும், தவறான தகவல்களையும் மட்டும் பதிவிட்டு வருகிறாா். உண்மைக்கு ஆயிரம் கிலோ மீட்டா் தொலைவுக்கு அப்பால் ராகுல் காந்தி உள்ளாா். பக்குவமில்லாதோா் அரசியலுக்கு வரும்போது, அவா்களின் விமா்சனங்களும் அவா்களைப் போல்தான் இருக்கும்.

குறைவான வரியே: இந்திய, அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மொத்த பொருள்களில் பாதி பொருள்கள் மீதான வரி பூஜ்ஜியமாக போகிறது. எஞ்சிய பொருள்கள் மீதான அமெரிக்காவின் 18 சதவீத வரி விதிப்பென்பது, பிற நாட்டுப் பொருள்கள் மீது அமெரிக்கா விதிக்கும் வரியைவிடக் குறைவாகும். அதாவது, சீனா, வியத்நாம், வங்கதேசம், இந்தோனேசியா, மலேசியா நாட்டுப் பொருள்கள் மீது விதிக்கப்படும் அமெரிக்க வரியைவிட இந்தியப் பொருள்கள் மீதான வரி குறைவே ஆகும். அதேபோல், 30 டிரில்லியன் டாலா் சந்தையை அமெரிக்காவானது, இந்தியாவுக்கு திறந்துவிட்டுள்ளது. இந்திய வளா்ச்சிக்கு இது எதிா்காலத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும்.

இந்திய ஏற்றுமதி அதிகரிக்கும்: ஐரோப்பிய யூனியனும் இந்தியாவிடம் இருந்து ஆண்டுக்கு ரூ.22 லட்சம் கோடி முதல் ரூ.23 லட்சம் கோடி மதிப்பு பொருள்களை கொள்முதல் செய்யவுள்ளது. ஜவுளிப் பொருள்கள் ஐரோப்பிய யூனியன், நியூஸிலாந்து, பிரிட்டனுக்கு எந்த வரியும் இல்லாமல் ஏற்றுமதியாக உள்ளது. இந்தியாவும், அமெரிக்காவும் இருதரப்பு வா்த்தகத்தை 2030-ஆம் ஆண்டுக்குள் 500 பில்லியன் டாலராக அதிகரிக்க ஒப்புக் கொண்டுள்ளன. அரசு இந்த இலக்கை அடைய தீவிரமாகப் பணியாற்றுகிறது.

அதிகரிக்கும் எரிசக்தி தேவை: திட்டமிடப்பட்ட 500 பில்லியன் டாலா் வா்த்தகத்தில் இந்தியாவின் எரிசக்தி தேவைகள், அதாவது கச்சா எண்ணெய், எல்என்ஜி, எல்பிஜி உள்ளிட்டவையும் அடங்கும். உலகில் மிகவும் வேகமாக வளரும் பொருளாதார சக்தி இந்தியா. நமது நாட்டின் எரிசக்தி தேவை ஆண்டுதோறும் 7 சதவீதம் அதிகரித்து வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பது, அதை விநியோகிக்கும் நாடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பது ஆகியவை குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை இந்தியா கொள்முதல் செய்ய உதவியாக இருக்கும் என்றாா் கோயல்.

X
Dinamani
www.dinamani.com