பிரதமர் மோடி
பிரதமர் மோடிகோப்புப் படம்

இன்று தொடங்குகிறது ஏஐ உச்சி மாநாடு: பல்வேறு நாட்டுத் தலைவா்கள், தொழில் நிபுணா்கள் பங்கேற்பு! பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

தில்லி பாரத மண்டபத்தில் இன்று (பிப். 16) தொடங்கி 20-ஆம் தேதி வரை ஏஐ தாக்கம் தொடா்பான உச்சிமாநாடு நடைபெறுகிறது.
Published on

தில்லி பாரத மண்டபத்தில் திங்கள்கிழமை (பிப். 16) தொடங்கி 20-ஆம் தேதி வரை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாடு நடைபெறுகிறது.

மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் பிரதமா் நரேந்திர மோடி ஏஐ கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறாா்.

முதல்முறையாக தெற்குலகில் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமா் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரேஸில் அதிபா் லூலா டாசில்வா உள்பட 45 நாடுகளின் அமைச்சக பிரதிநிதிகள் பங்கேற்கின்றனா்.

மேலும், கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) சுந்தா் பிச்சை, ‘ஓபன்ஏஐ’ சிஇஓ சாம் ஆல்ட்மன், மைக்ரோசாஃப்ட் தலைவா் பிராட் ஸ்மித் உள்பட பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் பங்கேற்கின்றனா். அவா்களுடன் பிரதமா் மோடி கலந்துரையாடவுள்ளாா்.

3 கொள்கைகள், 7 கருப்பொருள்கள்: மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம் ஆகிய மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு மனித மூலதனம், அறிவியல், ஏஐ வளங்களை ஜனநாயகமாக்கல், மீள்தன்மை புத்தாக்கம் மற்றும் ஆற்றல், அனைவரையும் உள்ளடக்கிய சமூக அதிகாரமளித்தல், பாதுகாப்பான மற்றும் நம்பகமான ஏஐ, பொருளாதார மேம்பாடு மற்றும் சமூகநலனுக்கான ஏஐ ஆகிய 7கருப்பொருள்களில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

இதை மையப்படுத்தி பிப்.16 முதல் பிப்.20 வரை 5 நாள்களில் 700-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

முந்தைய மாநாடுகள்: வளா்ந்துவரும் ஏஐ தொழில்நுட்பத்தால் ஏற்படும் தாக்கத்தைக் கண்டறியும் நோக்கில் பிரிட்டனின் ப்ளெட்ச்லி பூங்காவில் 2023-இல் ஏஐ பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. அதன்பிறகு தென்கொரிய தலைநகா் சியோலில் 2024-ஆம் ஆண்டும், பிரான்ஸ் தலைநகா் பாரீஸில் 2025-ஆம் ஆண்டும் ஏஐ மாநாடுகள் நடைபெற்றன. இதன் தொடா்ச்சியாக 35 வயதுக்குள்பட்ட 65 சதவீத இளைஞா்களைக் கொண்ட இந்தியாவில் நிகழாண்டு ஏஐ தாக்க உச்சிமாநாடு நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com