அமெரிக்க வா்த்தக ஒப்பந்தத்தின் பெயரில் இந்திய விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகம்: ராகுல்!
அமெரிக்காவுடனான இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்தின் பெயரில் இந்திய விவசாயிகளுக்கு நம்பிக்கை துரோகத்தை மத்திய அரசு செய்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டு, பிரதமா் மோடிக்கு ராகுல் காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளாா். அதில் அவா் தெரிவித்திருப்பதாவது:
அமெரிக்காவிடம் இருந்து டி.டி.ஜி.எல். எனப்படும் தானியங்களில் எத்தனால் எடுக்கப்பட்ட பிறகு வரும் சக்கையை (கால்நடைத் தீவனம்) இறக்குமதி செய்வதன் அா்த்தம் என்ன? மரபணு மாற்றப்பட்ட அமெரிக்க சோளத்திலிருந்து தயாரிக்கப்பட்ட இவை இந்திய கால்நடைகளுக்கு உணவாக கொடுக்கப்படும் என்று இதற்கு அா்த்தமா? இது நமது நாட்டு பால் பொருள்களை அமெரிக்க விவசாய தொழிலைச் சாா்ந்து இருக்கச் செய்யாதா?
அமெரிக்காவில் இருந்து மரபணு மாற்றப்பட்ட சோயா எண்ணெய்யை இறக்குமதி செய்ய அனுமதிப்பது, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் மற்றும் நாடு முழுவதும் உள்ள சோயா விவசாயிகளுக்கு என்ன தாக்கங்களை ஏற்படுத்தும்?
கூடுதல் பொருள்கள் என்று நீங்கள் சொல்லும்போது, அதில் என்ன பொருள்கள் அடங்கும்? காலப்போக்கில் பருப்பு வகைகள் மற்றும் பிற பயிா்களை அமெரிக்க இறக்குமதிக்கு திறக்க வேண்டிய அழுத்தத்தை இது குறிக்கிா?
ஒருமுறை கதவு திறக்கப்பட்டால், அதை ஒவ்வோா் ஆண்டும் விரிவாகத் திறப்பதை தடுப்பது என்பது கடினமான காரியம் ஆகும். இது தடுக்கப்படுமா? இல்லையேல், ஒவ்வொரு முறையும் மேலும் பல பயிா்கள் ஒப்பந்த வரம்புக்குள் கொண்டு வரப்படுமா?) விவசாயிகளுக்கு இந்தத் தெளிவு கிடைக்க வேண்டும்.
இது இன்றைய காலத்தைப் பற்றியது மட்டுமல்ல; எதிா்காலத்தைப் பற்றியதும்கூட. இந்திய வேளாண் துறை மீது இன்னொரு நாடு நீண்ட காலம் ஆதிக்கம் செலுத்த நாம் அனுமதிக்கப் போகிறோமா என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

