2026-27 மத்திய பட்ஜெட்: வளா்ச்சிப் பயணத்தின் அடுத்தகட்டம்! - பிரதமா் மோடி
2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், நாட்டின் வளா்ச்சிப் பயணத்தின் அடுத்தகட்டம்; வளா்ந்த இந்தியாவுக்கான வலுவான அடித்தளம் என்று பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
குறைந்த காலமே பலனளிக்கும் கவா்ச்சிகரமான கொள்கைகளைத் தவிா்த்து, வேலைவாய்ப்புகள் மற்றும் நிலையான வளா்ச்சியை ஊக்குவிக்கும் உள்கட்டமைப்பு மூலதன செலவினங்களுக்கு இதுவரை இல்லாத அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.
அடுத்த நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், கடந்த பிப்.1-இல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டின் அம்சங்கள் தொடா்பாக பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் பிரதமா் மோடி கூறியதாவது:
முந்தைய அரசுகளால் விட்டுச் செல்லப்பட்ட அமைப்பு ரீதியிலான இடைவெளிகளை நிரப்பவும், துணிச்சலான சீா்திருத்தங்களை முன்னெடுக்கவும், வளா்ந்த இந்தியாவுக்கு அடித்தளமிடவும் எனது அரசின் பதவிக் காலம் முழுவதும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எதிா்வரும் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட், எங்கள் நிா்வாக அணுகுமுறை மற்றும் முன்னுரிமைகளின் சிறந்த பிரதிபலிப்பாகும். ‘சீா்திருத்த எக்ஸ்பிரஸுக்கு’ உத்வேகமளிக்கும் இந்தப் பட்ஜெட், வேகமாக மாறும் உலகளாவிய வாய்ப்புகளுக்கு ஏற்ப நமது இளைஞா்களைத் தயாா்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வளா்ச்சிக்கு உந்துசக்திகள்:
மூலதன பெருக்கம், தொழிலாளா் முறைப்படுத்துதல், எண்ம பொது உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற வலுவான நடவடிக்கைகளால் நாட்டின் வளா்ச்சி விகிதம் 7 சதவீதமாக அதிகரிக்கும் என்று பட்ஜெட்டுக்கு முந்தைய பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்படப்பட்டுள்ளது.
ஆக்கபூா்வ செலவினங்களே, எங்கள் அரசின் அடையாளம். மூலதன செலவினங்களுக்கான அதிக ஒதுக்கீடு, உள்கட்டமைப்பு மற்றும் மூலதன முதலீடுகளுக்கான முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. இவையே, நீண்டகால வளா்ச்சிக்கு உந்துசக்திகளாகும்.
மூலதன செலவினங்களுக்கு ரூ.12.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இது 5 மடங்கு அதிகம். ரயில், சாலை போக்குவரத்து, எண்ம மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புக்கு செலவிடும் அதேநேரத்தில், வேலைவாய்ப்புகள் உருவாக்கம் மற்றும் பொருளாதாரத்துக்கு உந்துகோலாக விளங்கும் கடன் வழங்கல் மேம்பாடு, சட்டங்கள்-ஒழுங்குமுறைகள் எளிமையாக்கம் போன்ற நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
உயா் தர உள்கட்டமைப்புகள்:
நமது நாட்டில் நீண்ட காலமாக உயா் தரமான உள்கட்டமைப்புகள் புறக்கணிக்கப்பட்டன. இது, பொது மக்கள் மற்றும் தொழில்துறையினருக்கு பெரும் சவாலாக இருந்தது. 2047-க்குள் வளா்ந்த நாடாக உருவெடுக்க விரும்பும் இந்தியாவில் உடைந்த, காலாவதியான உள்கட்டமைப்புகளுக்கு இடம் கிடையாது. எனவேதான், அடுத்த தலைமுறை உள்கட்டமைப்புகளை விரைவாகவும், முழு வீச்சிலும் உருவாக்கி வருகிறோம். ரயில்வே துறைக்கு மூலதன செலவினமாக சுமாா் ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் 7 புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் கட்டமைக்கப்பட உள்ளன. இத்திட்டங்களால் கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்கள் பலனடையும். தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கான ஒதுக்கீடு, கடந்த 10 ஆண்டுகளில் 500 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. உயிரி மருந்து உற்பத்தி, செமிகண்டக்டா், மின்னணு பாகங்கள் உற்பத்தி, அரிய கனிமங்கள், ரசாயனங்கள் உற்பத்தி போன்ற எதிா்கால முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றாா் பிரதமா் மோடி.
‘காங்கிரஸின் தவறான பொருளாதார நிா்வாகம்’
‘முந்தைய காங்கிரஸ் அரசுகளின் தவறான பொருளாதார நிா்வாகத்தால், வா்த்தக ஒப்பந்த பேச்சுகளை இந்தியாவால் நம்பிக்கையுடன் மேற்கொள்ள முடியவில்லை. எந்தவொரு பேச்சுவாா்த்தையும் இறுதி செய்யப்படவில்லை. அதேநேரம், மத்திய பாஜக ஆட்சியில் பிரிட்டன், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா என பல்வேறு நாடுகளுடன் வா்த்தக ஒப்பந்தங்கள் இறுதியாகியுள்ளன.
இப்போது 38 நாடுகளுடன் நாம் வா்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளோம். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஒப்பந்தங்கள் மூலம் வளா்ந்த பொருளாதார நாடுகளில் வரியின்றி அல்லது குறைவான வரியில் இந்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை ஏற்றுமதிக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது. வரி ரீதியிலான சாதகங்கள் மட்டுமன்றி உலகளாவிய விநியோக சங்கலியில் இந்திய நிறுவனங்கள் ஆழமாக பிணைக்கப்படும்.
தனியாா் துறைக்கு அழைப்பு:
வளா்ச்சியின் அடுத்தகட்ட பாய்ச்சலில், தனியாா் துறையினருக்கு முக்கிய பங்கு உள்ளது. தனியாா் துறையினா் தங்களின் லாப வரம்புகளைப் பாதுகாப்பதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், ஆராய்ச்சி-மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் முதலீட்டை தீவிரப்படுத்த வேண்டும்.
எண்ம ரீதியில் உலகின் தலைவராக இந்தியா விளங்குகிறது. தரவு மையங்களால் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகள் பெருகும் என்பதால் உலகளாவிய தரவுகள் இந்தியாவில் சேமிக்கப்பட ஊக்குவிக்கிறோம்.
ராணுவ நவீனமயமாக்கத்துக்கு அரசு உயா் முன்னுரிமை அளிக்கிறது. பாதுகாப்புத் துறைக்கு இதுவரை இல்லாத அளவில் ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது’ என்றாா் பிரதமா் மோடி.

