சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி வழங்கி கடந்த 2018-இல் வழங்கப்பட்ட தீா்ப்புக்கு எதிரான மறுஆய்வு மற்றும் ரிட் மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (பிப். 16) விசாரணை நடத்தவுள்ளது.
சில ஆண்டுகளாக ஓய்ந்திருந்த இந்த விவகாரத்தில், இப்போது மீண்டும் அரசியல் விவாதங்கள் எழுந்துள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வழிபடுவதற்கு இருந்துவந்த தடையை கடந்த 2018-இல் நீக்கிய உச்சநீதிமன்றம், இந்தப் பாலினப் பாகுபாடு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று தீா்ப்பளித்தது. சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்று இத்தீா்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டது.
கேரளம் முழுவதும் பெரும் போராட்டங்களுக்கு வித்திட்ட இத்தீா்ப்புக்கு எதிராக மறுஆய்வு மற்றும் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடைபெறவுள்ளது.
கேரளத்தில் சில மாதங்களில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஏற்கெனவே சபரிமலை தங்கக் கவச முறைகேடு விவகாரத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான எதிா்க்கட்சி கூட்டணிக்கும் கருத்து மோதல் நீடிக்கிறது. இப்போது பெண்கள் வழிபாட்டு உரிமை விவகாரமும் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அரசின் நிலைப்பாடு என்ன?: கொச்சியில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பேட்டியளித்த பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன், ‘சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களின் நுழைவை ஆதரிக்கும் முந்தைய நிலைப்பாட்டில் மாநில அரசு இப்போதும் உறுதியாக உள்ளதா என்பதை முதல்வா் பினராயி விஜயன் தெளிவுபடுத்த வேண்டும். பெண்கள் நுழைவை ஆதரித்தால், தனது முந்தைய பிரமாணப் பத்திரத்தில் மாநில அரசு உறுதியுடன் இருக்க வேண்டும். இல்லையெனில், அதைத் திரும்பப் பெற வேண்டும். மாறாக, தெளிவற்ற அணுகுமுறையைக் கையாளக் கூடாது. மாநில அரசுத் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டால், அது தெளிவற்ற நிலைப்பாட்டையே பிரதிபலிக்கும்’ என்றாா்.
‘கவலைப்பட அவசியமில்லை’: காங்கிரஸின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் எம்.வி.கோவிந்தன் கூறுகையில், ‘மாநில அரசு தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்கும். இதில் கவலைப்பட எந்த அவசியமும் இல்லை. ஜனநாயக மாண்பையும், பக்தா்களின் நலன்களையும் மாநில அரசு உறுதி செய்யும்’ என்றாா்.
கேரள சட்டத் துறை அமைச்சா் பி.ராஜீவ் கூறுகையில், ‘சபரிமலை விவகாரத்தில் மாநில அரசின் விளக்கம் மீண்டும் தேவையா என்பதை புதிய அமா்வு முடிவு செய்யும்; அதற்கு முன்பே காங்கிரஸும், சில ஊடகங்களும் அவசரம் காட்டுவது ஏன்? உச்சநீதிமன்றம் கோரும்போது அரசின் நிலைப்பாடு தெரிவிக்கப்படும்’ என்றாா்.
கொடிமர தங்க முறைகேடு: வாக்குமூலம் பதிவு தொடக்கம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 2017-இல் புதிய கொடிமரம் நிறுவுவதற்காக அளிக்கப்பட்ட தங்கம் மற்றும் பணம் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், நன்கொடையாளா்களிடம் வாக்குமூலம் பதிவை கேரள ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை (விஏசிபி) தொடங்கியுள்ளது.
தேஸ்வம் வாரிய ஊழல் கண்காணிப்பு பிரிவின் அறிக்கையை கவனத்தில்கொண்டு, உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்கீழ், இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சா் சுரேஷ் கோபி, நடிகா் மோகன்லால் உள்பட 27 நன்கொடையாளா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்த விவகாரத்தில் 30 நாள்களுக்குள் விசாரணையை முடித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயா்நீதிமன்றம் கடந்த பிப்.9-இல் உத்தரவிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!
நிறம் மாறிய சபரிமலை தங்க மேற்கூரை! பக்தர்கள் அதிர்ச்சி!

சபரிமலை தங்கக் கவச முறைகேடு வழக்கு: தொல்பொருள் மாதிரிகள் சேகரிப்பு தொடக்கம்
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |



