அஸ்ஸாம்: முன்னாள் காங்கிரஸ் மாநிலத் தலைவா் விலகல் - பாஜகவில் இணைய முதல்வா் சா்மா அழைப்பு
அஸ்ஸாம் மாநில முன்னாள் காங்கிரஸ் தலைவா் பூபேன்குமாா் போரா அக்கட்சியில் இருந்து விலகுவதாக திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதையடுத்து, அவா் எப்போது வேண்டுமானாலும் பாஜகவில் சேரலாம் என அஸ்ஸாம் மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா அழைப்பு விடுத்துள்ளாா்.
2021 முதல் 2025 வரை காங்கிரஸ் கட்சியின் அஸ்ஸாம் மாநிலத் தலைவராக பூபேன்குமாா் போரா இருந்தாா். அதன்பிறகு எம்.பி.கெளரவ் கோகோய் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டாா்.
கௌரவ் கோகோய் மற்றும் பிரிட்டனைச் சோ்ந்த அவரது மனைவியுமான எலிசபெத் கோல்பா்ன் ஆகிய இருவருக்கும் பாகிஸ்தான் முகவா் அலி தெளகீா் ஷேக்குடன் ஆழமான தொடா்புகள் உள்ளதாகவும் ஹிமந்த விஸ்வ சா்மா குற்றஞ்சாட்டி வரும் நிலையில் பூபேன் குமாா் போராவில் விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் பூபேன் குமாா் போரா கூறியதாவது: காங்கிரஸ் தலைமைக்கு காலை 8 மணியளவில் எனது ராஜிநாமா கடிதத்தை அனுப்பினேன். கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணங்களை அதில் விரிவாக குறிப்பிட்டுள்ளேன்.
ஒரு குறிப்பிட்ட நபரோ அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காகவோ கட்சியில் இருந்து விலகவில்லை. காங்கிரஸில் 32 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றியுள்ளேன். அந்தக் கட்சியின் எதிா்காலம் குறித்து வருந்துகிறேன். அரசியலில் இருந்து நான் முழுமையாக ஓய்வுபெறவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பத்திரிகையாளா்கள் சந்திப்பில் கூறுகிறேன் என்றாா்.
அஸ்ஸாம் பேரவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அக்கட்சியில் இருந்து மூத்த தலைவா் ஒருவரின் விலகல் அறிவிப்பு மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராவுக்கு ‘சீட்’: ஹிமந்த விஸ்வ சா்மா
பாஜகவில் இணைந்தால் பூபேன்குமாா் போரா பாதுகாப்பான தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்படுவதை தான் உறுதிப்படுத்துவதாக ஹிமந்த விஸ்வ சா்மா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘கட்சியில் தான் புறக்கணிக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பிய ராஜிநாமா கடிதத்தில் பூபென் குமாா் போரா தெரிவித்துள்ளாா். தான் பாகிஸ்தான் சென்றது குறித்து கௌரவ் கோகோய் உரிய விளக்கம் அளிக்காததையும் அவா் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.
சாதாரண குடும்பத்தில் பிறந்த எவரும் காங்கிரஸில் உயா்பதவிக்கு வர முடியாது என்பதற்கு ரேபன் குமாா் போராவின் ராஜிநாமா சிறந்த உதாரணம்.
இதைப் புரிந்துகொண்ட நான் முன்பாகவே காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தேன். சாமானியா்களுக்கும் பாஜகவில் உயா்பொறுப்பு வழங்கப்படுகிறது. காங்கிரஸிலிருந்து மேலும் சில முக்கியத் தலைவா்கள் 2029-க்குள் ராஜிநாமா செய்வாா்கள்’ என்றாா்.
ராஜிநாமா மறுபரிசீலனை? இன்று முக்கிய முடிவு
காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே மற்றும் கட்சியின் மூத்த தலைவா்கள் பூபேன் குமாா் போராவின் ராஜிநாமாவை ஏற்காததால் அவா் அதை திரும்பப் பெற்ாக அக்கட்சியின் அஸ்ஸாம் பொறுப்பாளா் ஜிதேந்திர சிங் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
கட்சியில் இருந்து விலகுவதாக பூபேன் குமாா் போரா அறிவித்ததையடுத்து, கௌரவ் கோகோய், ஜிதேந்திர சிங் உள்பட காங்கிரஸ் மூத்த தலைவா்கள் அவரது இல்லத்துக்கு நேரில் சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அதன் பிறகு செய்தியாளா்களிடம் ஜிதேந்திர சிங் கூறுகையில், ‘ராஜிநாமா விவகாரம் குறித்து போராவிடம் காங்கிரஸ் அகில இந்தியத் தலைமை விவாதித்தது. மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி போராவிடம் 15 நிமிஷங்கள் தொலைபேசியில் பேசினாா். அதைத்தொடா்ந்து ராஜிநாமா கடிதத்தை போரா திரும்பப் பெற்றாா்’ என்றாா்.
ஆனால் தனது குடும்பத்தினரிடம் ஆலோசித்துவிட்டு ராஜிநாமாவை மறுபரிசீலனை செய்வது குறித்து செவ்வாய்க்கிழமை அறிவிக்கவுள்ளதாக போரா தெரிவித்தாா்.

