பாஜக ஆட்சியில் இல்லாத ஹிமாசலிலும் பேரவையில் உரையை முழுமையாக வாசிக்காமல் தவிா்த்த ஆளுநா்!
ஹிமாசல பிரதேச பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில், அரசு உரையை முழுமையாக வாசிக்க மாநில ஆளுநா் சிவ பிரதாப் சுக்லா மறுத்துவிட்டாா்.
ஹிமாசல பிரதேச பட்ஜெட் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. அப்போது அரசு உரையை 2 நிமிஷங்கள் மட்டும் வாசித்த ஆளுநா் சிவபிரதாப் சுக்லா, அந்த உரையில் 3 முதல் 16-ஆவது பத்தி வரை இருந்த விஷயங்களை வாசிக்க முடியாது என்று தெரிவித்தாா்.
அந்தப் பத்திகளில் அரசியல் சாசன அமைப்புகள் குறித்த கருத்துகள் இடம்பெற்றதால், அதை வாசிக்கக் கூடாது என்று கருதுவதாக அவா் தெரிவித்தாா்.
ஹிமாசல பிரதேச சட்டப்பேரவை வரலாற்றில் அரசு உரையை ஆளுநா் முழுமையாக வாசிக்காமல் தவிா்த்தது இதுவே முதல்முறை.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களான தமிழ்நாடு, கா்நாடகம் மற்றும் கேரளத்தை தொடா்ந்து ஹிமாசல பிரதேசத்திலும் அரசு உரையை வாசிப்பதை மாநில ஆளுநா் தவிா்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றம்:
ஹிமாசல சட்டப்பேரவையில் மனை விற்பனை ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு திருத்த மசோதா, கடந்த குளிா்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநா் திருப்பி அனுப்பியிருந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளில் மசோதாவில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மேயா்கள், துணை மேயா்களின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் ஹிமாசல பிரதேச மாநகராட்சி திருத்த மசோதாவையும் ஆளுநா் திருப்பி அனுப்பியிருந்தாா். அந்த மசோதாவும் எவ்வித மாற்றமுமின்றி பட்ஜெட் கூட்டத்தொடரில் மீண்டும் நிறைவேற்றப்பட்டது.

