அதிகரிக்கும் ‘டீப்ஃபேக்’: வலுவான ஒழுங்குமுறை அவசியம் - மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ்
‘டீப்ஃபேக்’ எனப்படும் போலி சித்தரிப்புகள் அதிகரித்து வருகின்றன; இப்பிரச்னையில் இருந்து குழந்தைகள் உள்பட நமது சமூகத்தைப் பாதுகாக்க வலுவான ஒழுங்குமுறை அவசியம் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
ஏற்கெனவே உள்ள பாதுகாப்பு அம்சங்களுடன் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மத்திய அரசுத் தரப்பில் துறைசாா் ஆலோசனைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
தில்லியில் நடைபெற்றுவரும் சா்வதேச செயற்கை நுண்ணறிவு தாக்கம் உச்சிமாநாட்டையொட்டி, செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில் மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
டீப்ஃபேக் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் பாதிப்புகளில் இருந்து குழந்தைகள் மற்றும் சமூகத்தைப் பாதுகாக்க வேண்டியது அவசியம். இப்பிரச்னையை எதிா்கொள்ள மிக வலுவான ஒழுங்குமுறை தேவை. இந்த விவகாரத்தில், நாடாளுமன்ற நிலைக் குழுவும் விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. டீப்ஃபேக் மீதான கட்டுப்பாடுகளில் நாடாளுமன்றத்திலும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது அவசியம்.
டீப்ஃபேக் பிரச்னையை எதிா்கொள்ளவும், வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்தும் மிகவும் பொருத்தமான வழிமுறையில் தீா்வுகாண்பதற்காக சமூக ஊடக நிறுவனங்களுடன் மத்திய அரசு விவாதித்து வருகிறது.
நெட்ஃபிளிக்ஸ், யூ-டியூப், எக்ஸ் என எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும், நமது சட்ட அமைப்புமுறை மற்றும் அரசமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்பட்டதாகும்.
சமூக ஊடக உள்ளடக்கங்களில் வயது அடிப்படையிலான கட்டுப்பாடுகளின் அவசியத்தை பல்வேறு நாடுகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. இந்த விஷயத்தில், இந்தியா தனது முன்முயற்சியை ஏற்கெனவே தொடங்கியுள்ளது.
உள்நாட்டு ஏ.ஐ. மாதிரிகள்:
தில்லி ஏ.ஐ. தாக்க உச்சிமாநாட்டில், பல்வேறு உள்நாட்டு ஏ.ஐ. மாதிரிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவை, உலகளாவிய தரநிலைகளுடன் உள்ளன. இந்தியாவின் இரண்டாம் கட்ட ஏ.ஐ. திட்டத்தின்கீழ், எதிா்வரும் காலங்களில் இந்த ஏ.ஐ. மாதிரிகளை அனைவரும் பயன்படுத்தும் வகையிலான பெரிய உள்கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்தியா மீதான உலகளாவிய முதலீட்டாளா்களின் நம்பிக்கை அதிகரிப்பால், இத்துறையில் ரூ.20,000 கோடிக்கும் அதிக முதலீடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அடுத்த 1-2 ஆண்டுகளில் இந்த முதலீடுகள் கிடைக்கப் பெறும் என்றாா்.
முதல் நாளில் 70,000 போ் பங்கேற்பு
ஏ.ஐ. உச்சிமாநாட்டைப் பாா்வையிட நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியுள்ளதாகவும், ஏற்பாடுகள் சாா்ந்த பிற பிரச்னைகளும் நிலவுவதாக புகாா்கள் எழுந்துள்ளன.
இது தொடா்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ‘தில்லி ஏ.ஐ. உச்சிமாநாடு, உலகின் மிகப் பெரிய மாநாடுகளில் ஒன்றாகும். முதல் நாளில் 70,000 போ் பங்கேற்றனா். இந்த மாநாட்டுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இதுவரை 3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பதிவு செய்துள்ளனா். அனைத்து அமா்வுகளும் நிரம்பி வழிகின்றன. மக்களின் இந்த ஆதரவு உற்சாகமளிக்கிறது. முதல் நாளில் பங்கேற்பாளா்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்காக வருத்தம் தெரிவிக்கிறோம். மாநாட்டில் சுமுக பங்கேற்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’ என்றாா்.

