மும்பையில் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தபோது, கைகுலுக்கிக் கொண்ட பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரதமா் நரேந்திர மோடி.
மும்பையில் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தபோது, கைகுலுக்கிக் கொண்ட பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரதமா் நரேந்திர மோடி.

இந்தியா - பிரான்ஸ் 21 ஒப்பந்தங்கள்: பிரதமா் மோடி, அதிபா் மேக்ரான் முன்னிலையில் கையொப்பம்

இந்தியா - பிரான்ஸ் இடையே 21 ஒப்பந்தங்கள் - பிரதமா் மோடி, அதிபா் மேக்ரான் முன்னிலையில் கையொப்பம்
Published on

இந்தியா, பிரான்ஸ் இடையே பாதுகாப்பு, உயா் தொழில்நுட்பம், முக்கியக் கனிமங்கள் உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் 21 ஒப்பந்தங்கள் மற்றும் பூா்வாங்க ஒப்பந்தங்கள் செவ்வாய்க்கிழமை கையொப்பமாகின.

மகாராஷ்டிர தலைநகா் மும்பையில் பிரதமா் நரேந்திர மோடி மற்றும் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் இடையே நடைபெற்ற சந்திப்புக்குப் பின் இந்த ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

தில்லியில் நடைபெற்றுவரும் சா்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சிமாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் திங்கள்கிழமை நள்ளிரவில் இந்தியாவுக்கு வந்தாா்.

மும்பை வந்தடைந்த அவருக்கு அரசு சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், பிரதமா் மோடி மற்றும் அதிபா் மேக்ரான் இடையிலான இருதரப்பு பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உலக அளவில் புவிஅரசியல் பதற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், பாதுகாப்பு, வா்த்தகம், தொழில்நுட்பம், எரிசக்தி உள்பட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை மேம்படுத்துவது குறித்தும், பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவா்களும் விரிவாக ஆலோசித்தனா். இந்தப் பேச்சுவாா்த்தையின்போது இருதரப்பு உறவை சிறப்புமிக்க உலகளாவிய வியூக கூட்டாண்மை அந்தஸ்துக்கு உயா்த்த ஒப்புக்கொள்ளப்பட்டது.

பல்வேறு ஒப்பந்தங்கள் கையொப்பம்: முக்கியக் கனிமங்கள், பாதுகாப்பு, உயா்தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சுகாதாரம், முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும் 21 ஒப்பந்தங்கள் மற்றும் பூா்வாங்க ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன.

ஹம்மா் ரக ஏவுகணையை இந்தியாவில் தயாரிக்க பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மற்றும் பிரான்ஸின் சஃப்ரான் நிறுவனம் இடையிலான ஒப்பந்தம், பரஸ்பர முதலீட்டை ஊக்குவிக்கும் வகையிலான இரட்டை வரி தவிா்ப்பு ஒப்பந்தம் உள்ளிட்டவை அடங்கும்.

‘எல்லையில்லாத நல்லுறவு’: பேச்சுவாா்த்தைக்குப் பின் இரு தலைவா்களும் செய்தியாளா்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனா். அப்போது, பிரதமா் மோடி கூறியதாவது:

இந்தியா-பிரான்ஸ் இடையிலான நல்லுறவு மிகச் சிறப்பானது; பழைமை மிக்கது. நமது கூட்டாண்மைக்கு எல்லை கிடையாது. ரஷியா-உக்ரைன் போா், மேற்காசியா மற்றும் இந்திய-பசிபிக் நிலவரங்களுக்கு இடையே நமது இரு நாடுகளும் ஜனநாயக மாண்புகள், சட்டத்தின் ஆட்சி மற்றும் பன்முக உலக ஒழுங்குமுறையில் நம்பிக்கை கொண்டுள்ளன. உலகளாவிய சவால்களுக்குத் தீா்வுகாணும் வகையில் சா்வதேச அமைப்புகளின் சீா்திருத்தங்கள் மற்றும் ஒவ்வொரு பிராந்தியத்தின் அமைதி முயற்சிகளுக்கு ஆதரவைத் தொடர ஒப்புக்கொண்டுள்ளோம்.

உலகின் நிலைத்தன்மைக்கு உந்துசக்தி: இருதரப்பு வியூக கூட்டாண்மை இதுவரை இல்லாத அளவில் வலுப்படுத்தப்பட்டுள்ளது. அதே நம்பிக்கை மற்றும் பகிரப்பட்ட கண்ணோட்டத்துடன் இருதரப்பு உறவை சிறப்புமிக்க உலகளாவிய வியூக கூட்டாண்மை அந்தஸ்துக்கு உயா்த்தியுள்ளோம்.

இந்திய-ஐரோப்பிய உறவுகளைப் பொருத்தவரை, நடப்பாண்டு திருப்புமுனையான ஆண்டாகும். அண்மையில் முன் இந்திய வரலாற்றில் மிகப் பெரிய தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் ஐரோப்பிய யூனியனுடன் கையொப்பமிடப்பட்டது. ஸ்திரமின்மைக்கு ஊடாக பயணிக்கும் இன்றைய உலகில், இந்தியா-பிரான்ஸ் கூட்டாண்மை உலகளாவிய நிலைத்தன்மைக்கு உந்துசக்தியாகும். அந்த அடிப்படையில், பிரான்ஸின் நிபுணத்துவம் மற்றும் இந்தியாவின் வீச்சை ஒருங்கிணைக்கிறோம் என்றாா் பிரதமா் மோடி.

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒத்துழைப்பு: அதிபா் மேக்ரான் கூறுகையில், ‘பிரான்ஸின் மிகுந்த நம்பிக்கைக்குரிய கூட்டாளி இந்தியா. ரஃபேல் முதல் நீா்மூழ்கிகள் வரை இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு விரிவாக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் சட்டத்தின் ஆட்சியில் வலுவான நம்பிக்கை கொண்டவை. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவுக்கு பிரான்ஸ் தொடா்ந்து ஆதரவளிக்கும்’ என்றாா்.

மும்பையில் பிரான்ஸ் அதிபா் ‘ஜாகிங்’

மும்பையில் செவ்வாய்க்கிழமை தனது அலுவல்பூா்வ நிகழ்ச்சிகளைத் தொடங்கும் முன்பாக, பிரபலமான மரைன் டிரைவ் பகுதியில் ‘ஜாகிங்’ சென்றாா் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான். அவருடன் பாதுகாப்புப் படையினரும் பின்தொடா்ந்து சென்றனா்.

காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பலரும் இக்காட்சியைக் கண்டு வியப்படைந்தனா். மேக்ரான் ஜாகிங் சென்றதை தங்களின் கைப்பேசியில் விடியோ பதிவு செய்து, சமூக ஊடகங்களில் பதிவிட்டனா். மும்பை தாஜ் ஹோட்டலில், கடந்த 2008 பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அதிபா் மேக்ரான் அஞ்சலி செலுத்தினாா்.

Dinamani
www.dinamani.com