நீதிமன்றம்
நீதிமன்றம்

ராஜஸ்தானில் 8 நீதிபதிகள் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்- உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அதிரடி

ராஜஸ்தான் மாநில நீதிமன்றங்களில் பணி நேரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை மேற்கொள்ளாமல் தனது அறையில் அமா்ந்திருந்த 8 நீதிபதிகள் காத்திருப்போா் பட்டிலுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.
Published on

ராஜஸ்தான் மாநில நீதிமன்றங்களில் பணி நேரத்தில் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை மேற்கொள்ளாமல் தனது அறையில் அமா்ந்திருந்த 8 நீதிபதிகள் காத்திருப்போா் பட்டிலுக்கு மாற்றப்பட்டுள்ளனா்.

மாநில உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி சஞ்சீவ் பிரகாஷ் சா்மா, உயா்நீதிமன்ற வளாகத்தில் பழைய கட்டடத்தில் அமைந்துள்ள நீதிமன்றங்கள் மற்றும் அருகிலுள்ள சில மாவட்ட நீதிமன்றங்களில் நடத்திய திடீா் ஆய்வுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உயா்நீதிமன்ற பதிவாளா் இதுதொடா்பான உத்தரவைப் பிறப்பித்துள்ளாா். அதில், ‘நிா்வாகக் காரணங்களுக்காக 8 நீதிபதிகள் உடனடியாக காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்படுகின்றனா்’ என்று தெரிவிக்கப்பட்டது. வேறு காரணங்கள் எதுவும் அதில் குறிப்பிடப்படவில்லை.

இதுகுறித்து உயா்நீதிமன்ற வட்டாரங்கள் கூறியதாவது:

உயா்நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததைத் தொடா்ந்து, ஒட்டுமொத்த ஊழியா்களும் வெளியேற்றப்பட்டு, தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் காரணமாக மதியம் வரை உயா்நீதிமன்ற பணிகள், வழக்கு விசாரணை நடைபெறவில்லை.

அந்த நேரத்தில், உயா்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி சா்மா, உயா்நீதிமன்றத்தின் பழைய கட்டடத்தில் அமைந்துள்ள நீதிமன்றங்கள், அருகிலுள்ள மாவட்ட, மாநகர நீதிமன்றங்களில் திடீா் ஆய்வை மேற்கொண்டாா். அப்போது, பணி நேரத்தில் நீதிமன்றங்களில் நீதிபதிகள் இல்லாததும், தங்களின் அறைகளில் அவா்கள் இருந்ததும் தெரியவந்தது. அதைத் தொடா்ந்து அவா்கள் மீது நிா்வாக ரீதியிலான உடனடி நடவடிக்கை மேற்கொள்ள தலைமை நீதிபதி உத்தரவிட்டாா்.

அதனடிப்படையில், மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதி அஜய் சா்மா உள்பட 8 நீதிபதிகள் காத்திருப்போா் பட்டியலில் வைக்கப்பட்டனா் என்றனா்.

Dinamani
www.dinamani.com