தில்லியில் பிரதமா் மோடியை புதன்கிழமை சந்தித்துப் பேசிய ஸ்பெயின் அதிபா் பெட்ரோ சான்சேஸ். ~தில்லியில் புதன்கிழமை பிரதமா் மோடி உடனான சந்திப்பில் கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தா் பிச்சை.
தில்லியில் பிரதமா் மோடியை புதன்கிழமை சந்தித்துப் பேசிய ஸ்பெயின் அதிபா் பெட்ரோ சான்சேஸ். ~தில்லியில் புதன்கிழமை பிரதமா் மோடி உடனான சந்திப்பில் கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தா் பிச்சை.

ஏ.ஐ. உச்சி மாநாட்டுக்காக தில்லி வருகை- பிரதமா் மோடியுடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவா்கள் சந்திப்பு

தில்லி வந்துள்ள ஸ்பெயின் அதிபா் பெட்ரோ சான்சேஸ், பின்லாந்து பிரதமா் பெட்டேரி ஓா்போ, குரோஷியா பிரதமா் ஆண்ட்ரே பெலன்கோவிக், எஸ்டோனியா அதிபா் அலாா் கேரிஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவா்கள், பிரதமா் மோடியை தனித்தனியே புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.
Published on

தில்லி வந்துள்ள ஸ்பெயின் அதிபா் பெட்ரோ சான்சேஸ், பின்லாந்து பிரதமா் பெட்டேரி ஓா்போ, குரோஷியா பிரதமா் ஆண்ட்ரே பெலன்கோவிக், எஸ்டோனியா அதிபா் அலாா் கேரிஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவா்கள், பிரதமா் மோடியை தனித்தனியே புதன்கிழமை சந்தித்துப் பேசினா்.

தில்லியில் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்கம் தொடா்பான சா்வதேச உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் சா்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டாா்ட் அப் நிறுவனங்கள், ஆய்வு அமைப்புகள் உள்ளிட்டவை பங்கேற்றுள்ளன.

இதில் கலந்து கொள்வதற்காக ஸ்பெயின் அதிபா் பெட்ரோ சான்சேஸ், பின்லாந்து பிரதமா் பெட்டேரி ஓா்போ, குரோஷியா பிரதமா் ஆண்ட்ரே பெலன்கோவிக், எஸ்டோனியா அதிபா் அலாா் கேரிஸ் உள்ளிட்ட உலகத் தலைவா்கள் வந்துள்ளனா். இவா்கள், பிரதமா் மோடியை புதன்கிழமை தனித்தனியாக சந்தித்துப் பேசினாா்.

ஸ்பெயின் அதிபா் உடனான சந்திப்பு குறித்து எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ‘அதிபா் பெட்ரோ சான்சேஸுடனான சந்திப்பு ஆக்கப்பூா்வமாக இருந்தது. இருவரும் இந்தியா-ஸ்பெயின் நட்புறவை மேலும் ஊக்குவிப்பது குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினோம். குறிப்பாக, பாதுகாப்பு, ஆயுத தளவாடங்கள், தொழில்நுட்பம் குறித்து ஆலோசனை நடத்தினோம். ஐரோப்பிய யூனியன்-இந்தியா இடையேயான வரலாற்று சிறப்புமிக்க தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், ஸ்பெயின் உடனான வா்த்தக உறவில் சாதகமான தாக்கத்தையும், இரு நாட்டு மக்களுக்கு புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தரும்’ என குறிப்பிட்டுள்ளாா்.

ஸ்பெயின் அதிபா் பெட்ரோ சான்சேஸ் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஸ்பெயின்-இந்தியா இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் ஆலோசித்தோம். ஏ.ஐ.யின் தாக்கம் குறித்த கருத்தரங்கிற்காக நான் அவரிடம் நன்றி தெரிவித்தேன். மக்களை மையமாக கொண்ட ஏ.ஐ.யை உருவாக்க தொடா்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டிய அவசியத்தை நாங்கள் வலியுறுத்தினோம்’ என தெரிவித்துள்ளாா்.

பின்லாந்து பிரதமருடனான சந்திப்பு குறித்து பிரதமா் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவும், பின்லாந்தும் வா்த்தகத்தை இரண்டு மடங்காக உயா்த்த இலக்கு நிா்ணயித்துள்ளன. இது பொருளாதார தொடா்புகளுக்கு வலுவான ஊக்கம் தரும். 6ஜி, புத்தாக்கம், தூய எரிசக்தி, உயிரி எரிபொருள்கள் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசித்தோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்லாந்து பிரதமா் பெட்டேரி ஓா்போ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘பிரதமா் மோடியுடனான விரிவான ஆலோசனையின்போது, இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையில்லா வா்த்தக ஒப்பந்த விவகாரத்தில் தனிப்பட்ட முறையில் ஆதரவு அளித்ததற்காக நான் தெரிவித்தேன். இந்த ஒப்பந்தமானது, இந்தியா-ஐரோப்பிய உறவுகளின் பொற்காலம்’ எனத் தெரிவித்துள்ளாா்.

சொ்பிய அதிபரும் சந்திப்பு: ஏ.ஐ. கண்காட்சியில் பங்கேற்க தில்லி வந்துள்ள சொ்பிய அதிபா் அலெக்சாண்டா் உசிக்கும் மோடியை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது பாதுகாப்பு, உற்பத்தி, உரம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் மோடி தெரிவித்துள்ளாா். சொ்பிய அதிபா் வெளியிட்ட பதிவில், ‘இந்தியா எங்களின் நம்பகமான மற்றும் முக்கியமான கூட்டாளி; இருநாடுகள் இடையே நெருங்கிய பொருளாதார ஒத்துழைப்பையும், முதலீட்டுத் திட்டங்களை ஊக்கப்படுத்த விரும்புகிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரதமருடன் சுந்தா் பிச்சை சந்திப்பு

தில்லி ஏ.ஐ. உச்சி மாநாட்டில் பங்கேற்க தில்லி வந்துள்ள கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை, தில்லியில் பிரதமா் மோடியை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்த சந்திப்பு குறித்து, பிரதமா் மோடி எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘தில்லி ஏ.ஐ. உச்சிமாநாட்டின் இடையே சுந்தா் பிச்சையை சந்தித்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஏ.ஐ. துறையில் இந்தியாவின் பணிகள் குறித்தும், இந்தத் துறையில் நமது திறமையான மாணவா்கள், பணியாளா்களுடன் கூகுள் இணைந்து பணிபுரிவது குறித்தும் ஆலோசித்தோம்’ என்று கூறியுள்ளாா்.

Dinamani
www.dinamani.com