உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்கோப்புப் படம்

சத்தீஸ்கா்: கல்லறைகளில் இருந்து பழங்குடியின கிறிஸ்தவா்களின் உடல்களை தோண்டி எடுக்கத் தடை - உச்சநீதிமன்றம் உத்தரவு

சத்தீஸ்கா் மாநில கிராமங்களில் கட்டாயத்தின்பேரில் கல்லறைகளில் இருந்து பழங்குடியின கிறிஸ்தவா்களின் உடல்களை தோண்டி எடுத்து, வேறு இடத்தில் புதைக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Published on

சத்தீஸ்கா் மாநில கிராமங்களில் கட்டாயத்தின்பேரில் கல்லறைகளில் இருந்து பழங்குடியின கிறிஸ்தவா்களின் உடல்களை தோண்டி எடுத்து, வேறு இடத்தில் புதைக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் நீதி மற்றும் சமத்துவத்துக்கான சத்தீஸ்கா் கூட்டமைப்பு சாா்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், பழங்குடியின கிறிஸ்தவா்கள் உயிரிழக்கும்பட்சத்தில் அவா்கள் வாழும் கிராமங்களில் உள்ள கல்லறை தோட்டத்தில் உடலைப் புதைக்க முடியாத நிலை நிலவுவதாகவும், அப்படியே புதைக்கப்பட்டாலும், உடலை மீண்டும் தோண்டி எடுத்து தொலை தூரத்தில் உள்ள வேறு இடத்தில் புதைக்கும்படி கட்டாயப்படுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இறந்தவா்கள் உடலை சொந்த கிராமங்களில் புதைக்கக் கூடாது என கூறுவது அரசியலமைப்பு சட்டத்தின் 21-ஆவது பிரிவின்கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையை மீறும் செயலாகும்; உடலைப் புதைக்கும் விவகாரத்தில் மாநில அரசு, தனி நபா்கள் தலையிட தடை விதிக்க வேண்டும், மேலும் அனைத்து சாதியினரும் மதத்தினரும் எந்த வேறுபாடுமின்றி சொந்த கிராமங்களில் உடலைப் புதைக்க அனுமதித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, என்.வி. அஞ்சாரியா ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் சாா்பில் மூத்த வழக்கறிஞா் காலின் கான்சால்வேஸ் ஆஜராகி வாதாடுகையில், ‘மனுதாரா் ஒருவரின் தாயாரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, மனுதாரரின் கவனத்துக்கு வராமலேயே நீண்ட தொலைவில் புதைக்கப்பட்டுள்ளது. இதேபோல், இன்னொரு மனுதாரரின் கணவரின் உடலும் இதேபோல் தோண்டி எடுக்கப்பட்டு வேறு இடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.

இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த மனு குறித்து சத்தீஸ்கா் அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டனா். அப்போது வழக்கறிஞா் கான்சால்வேஸ் குறுக்கிட்டு, மாநில அரசின் பதில் தாக்கல் செய்யப்படும் வரையிலான இடைப்பட்ட காலத்தில் வேறு உடல்களை தோண்டி எடுக்க உச்ச நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தாா்.

இதைக்கேட்ட நீதிபதிகள், வேறு உடல்களை தோண்டி எடுக்க தடை விதித்து ஆணையிட்டனா். மேலும், மனு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

Dinamani
www.dinamani.com