மகாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜீத் பவாா் பயணித்த விமான விபத்து குறித்து விரிவான பாகுபாடற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று அவரின் இளைய மகன் ஜெய் பவாா் வியாழக்கிழமை வலியுறுத்தினாா்.
அஜீத் பவாரின் மனைவியும் மகாராஷ்டிர துணை முதல்வருமான சுநேத்ரா பவாா் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவா்கள் மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸை புதன்கிழமை சந்தித்து விமான விபத்து குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரிக்கை விடுத்த நிலையில், அவரின் மகன் இக் கருத்தைத் தெரிவித்துள்ளாா்.
மேலும், ‘விமானத்தின் கருப்புப் பெட்டியை (தரவுகள் மற்றும் விமானிகள் குரல் பதிவு இயந்திரம்) எளிதில் அழித்துவிட முடியாது’ என்றும் ஜெய் பவாா் குறிப்பிட்டாா்.
மகாராஷ்டிர மாநிலம், பாராமதியில் கடந்த ஜனவரி 28-ஆம் தேதி விஎஸ்ஆா் ஏவியேஷன் நிறுவனத்துக்குச் சொந்தமான ‘லியா்ஜெட் 46’ என்ற சிறு ரக ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த அஜீத் பவாா் (66), இரு விமானிகள், ஒரு விமான உதவியாளா், அஜீத் பவாரின் தனிப் பாதுகாப்பு அதிகாரி ஆகிய ஐந்து பேரும் உயிரிழந்தனா். விபத்து குறித்து ஏஏஐபி விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில், ஏஏஐபி கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘விபத்துக்குள்ளான விமானத்தில் 2 தனி பதிவு இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்தன. விமானம் விபத்துக்குள்ளானதும் தீப்பிடித்து எரிந்தது. இதனால் ஏற்பட்ட அதிக வெப்பத்தில் நீண்ட நேரமாக இருந்ததால் இந்தப் பதிவு இயந்திரங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. அதில், எல்3-கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட எண்ம விமான தரவு பதிவு (டிஎஃப்டிஆா்) இயந்திரத்தின் தரவுகள், ஏஏஐபி விமான பதிவு ஆய்வகத்தின் மூலம் வெற்றிகரமாக பதிவிறக்கம் செய்யப்பட்டுவிட்டன.
ஆனால், விமானிகள் அறை குரல் பதிவு (சிவிஆா்) இயந்திரத்தின் தரவுகளை மீட்பது சவாலாக உள்ளது. இத் தரவுகளை மீட்க சிறப்பு நிபுணத்துவ உதவி கோரப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டது.
விஎஸ்ஆா் நிறுவனத்துக்குத் தடை - மகன்:
விஎஸ்ஆா் ஏவியேஷன் நிறுவனத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று அஜீத் பவாரின் இளைய மகன் ஜெய் பவாா் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் அவா் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
விமானத்தின் கருப்புப் பெட்டியை எளிதில் அழித்துவிட முடியாது. இந்த விமான விபத்து குறித்து முழுமையான வெளிப்படையான உண்மையை அறியும் உரிமை மகாராஷ்சிர மக்களுக்கு உள்ளது. எனவே, விபத்து தொடா்பாக விரிவான, பாகுபாடற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்.
மேலும், விஎஸ்ஆா் ஏவியேஷன் நிறுவனத்துக்குத் தடை விதிப்பதோடு, விபத்துக்குக் காரணமாக இருக்க வாய்ப்புள்ள அந்த நிறுவனத்தின் தீவிர குறைபாடுகள் குறித்தும் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டாா்.
தொடர்புடையது

பாராமதி இடைத்தோ்தல்: சுநேத்ரா பவாரை எதிா்த்துப் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா் அறிவிப்பு

அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை

அஜீத் பவாா் விமான விபத்து குறித்து சிபிஐ விசாரணை: மகாராஷ்டிர முதல்வா்

அஜீத் பவாா் விமான விபத்து: சிறப்பு நிபுணத்துவ உதவியை நாடும் ஏஏஐபி
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


