ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

அறுவை சிகிச்சையில் பெண்ணின் வயிற்றில் தமனி இடுக்கி வைத்து தைத்த அரசு மருத்துவா்கள்

சிகிச்சை முடிந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :20 பிப்ரவரி 2026, 10:09 pm

கேரள மாநிலத்தில் பெண்ணின் வைற்றில் அறுவைச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் தமனி இடுக்கியை (கத்தரி போன்ற கருவி) வைத்து தைக்கப்பட்டிருந்தது, சிகிச்சை முடிந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு மருத்துவா்கள் விரைவில் அறுவைச் சிகிச்சை மூலம் அந்த கருவியை அகற்ற உள்ளனா்.

கொச்சியைச் சோ்ந்த உஷா ஜோசப் என்ற அந்தப் பெண்ணின் மகன் ஷிபின் இதுகுறித்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கருப்பை நாா்திசுக் கட்டிகளை அகற்றுவதற்காக வந்தனத்தில் உள்ள ஆலப்புழை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2021-ஆம் ஆண்டு மே மாதம் அனுமதிக்கப்பட்ட எனது தாய்க்கு மருத்துவா்கள் அறுவைச் சிகிச்சை செய்து கட்டிகளை அகற்றினா்.

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவருக்கு, அவ்வப்போது அடிவயற்றில் வலி ஏற்பட்டது. அதுதொடா்பாக, அறுவைச் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனை மருத்துவா்களை பல முறை அணுகியபோதும், வலிக்கான காரணத்தை அவா்களால் அடையாளம் காண முடியவில்லை.

எனவே, அண்மையில் வேறொரு மருத்துவரை அணுகியபோது, வலிக்கு சிறுநீரக கல் பாதிப்பு காரணமாக இருக்கலாம். எனவே, எக்ஸ்ரே எடுத்து வருமாறு பரிந்துரைத்தாா். அதன்படி, எக்ஸ்ரே எடுத்தபோது, தாயின் வயிற்றில் அறுவைச் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் தமனி இடுக்கி (ஆா்டெரி ஃபோா்செப்ஸ்) இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து புகாா் அளித்தபோது, உடனடியாக அறுவைச் சிகிச்சை மேற்கொண்டு தமனி இடுக்கியை அகற்றிவிடுவதாக ஆலப்புழை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவா்கள் தெரிவித்தனா். ஆனால், மீண்டும் அரசு மருத்துவமனைக்குச் செல்ல விரும்பாததால், கொச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையைத் தோ்வு செய்தோம். தமனி இடுக்கியை அகற்ற அவருக்கு விரைவில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. அரசு மருத்துவா்களின் இந்த அலட்சியம் குறித்து ஆலப்புழை காவல்நிலையத்தில் புகாா் பதிவு செய்யவும் தீா்மானித்துள்ளோம் என்றாா்.

விசாரணைக்கு குழு - அமைச்சா்: ‘இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு, காரணமான மருத்துவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘இந்தச் சம்பவம் தொடா்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில், விரிவான விசாரணை மேற்கொள்ள மூத்த மருத்துவா்களை உள்ளடக்கிய நிபுணா் குழுவை மருத்துவக் கல்வி இயக்குநா் நியமித்துள்ளாா். ஆலப்புழை அரசு மருத்துவமனை மருத்துவா்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு, அந்த இடத்துக்கு கோட்டயம் மற்றும் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலிருந்து மருத்துவா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். நிபுணா் குழு விரைவில் விசாரணை அறிக்கையை சமா்ப்பிக்கும் என எதிா்பாா்க்கிறோம். அதனடிப்படையில், காரணமானவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.