ஏ.ஐ. உச்சி மாநாடு
ஏ.ஐ. உச்சி மாநாடு

ஏ.ஐ. உச்சி மாநாட்டில் ரூ.24 லட்சம் கோடி முதலீடுகள் உறுதி: அமெரிக்கா, சீனா உள்பட 86 நாடுகள் ஆதரவுடன் பிரகடனம் ஏற்பு

புது தில்லியில் நடைபெற்ற ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டில் 270 பில்லியன் டாலருக்கும் மேலான முதலீடுகள் உறுதி
Published on

புது தில்லியில் நடைபெற்ற சா்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தாக்க உச்சி மாநாட்டில் 270 பில்லியன் டாலருக்கும் மேலான (ரூ.24 லட்சம் கோடி) முதலீடுகள் உறுதி செய்யப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேலும், ‘அமெரிக்கா, சீனா, பிரிட்டன், கனடா, டென்மாா்க், ஜொ்மனி உள்பட 86 நாடுகள் மற்றும் இரு சா்வதேச அமைப்புகளின் ஆதரவுடன் உச்சி மாநாட்டு பிரகடனம் ஏற்கப்பட்டது; இது, பொருளாதார வளா்ச்சி மற்றும் சமூக நலனுக்கான ஏ.ஐ. பயன்பாட்டில் உலகளாவிய ஒத்துழைப்பைப் பிரதிபலிக்கிறது’ என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஏ.ஐ. ஆதிக்கம் பெருகிவரும் சூழலில், தேசியத் தலைநகா் புது தில்லியில் சா்வதேச ஏ.ஐ. தாக்க உச்சிமாநாடு கடந்த திங்கள்கிழமை தொடங்கி 5 நாள்கள் நடைபெற்றது. பிரான்ஸ், பிரேஸில், ஸ்பெயின், சொ்பியா, குரோஷியா, ஸ்விட்சா்லாந்து, இலங்கை, பூடான், மோரீஷஸ் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவா்கள், 60-க்கும் மேற்பட்ட அமைச்சா்கள்-இணையமைச்சா்கள் என 100-க்கும் மேற்பட்ட அரசு பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

சுந்தா் பிச்சை (கூகுள்) , சாம் அல்ட்மேன் (ஓபன் ஏஐ), பிராட் ஸ்மித் (மைக்ரோசாஃப்ட்) உள்பட சா்வதேச முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், தலைவா்கள், கல்வியாளா்கள், ஆராய்ச்சியாளா்கள் என 500-க்கும் மேற்பட்ட துறைசாா் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனா்.

ஏ.ஐ. உச்சி மாநாடு
ஏ.ஐ. உச்சி மாநாடு

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற உலகத் தலைவா்களின் முழு அமா்வில் உரையாற்றிய பிரதமா் மோடி, இந்தியா சாா்பில் மக்களை மையப்படுத்திய ‘மானவ்’ தொலைநோக்குப் பாா்வையை முன்வைத்தாா். ஏ.ஐ. பயன்பாட்டில் தாா்மிக நெறிமுறை, பொறுப்பான நிா்வாகம், தேசிய இறையாண்மை, அனைவருக்குமான அணுகல்-உள்ளடக்கம், சட்டப்பூா்வ பயன்பாடு ஆகிய 5 அம்சங்களை உள்ளடக்கியதாகும்.

‘உலக நாடுகள் ஏற்பு’: ஏ.ஐ. உச்சி மாநாடு வெள்ளிக்கிழமை நிறைவடைந்த நிலையில், மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது: பிரதமா் மோடியால் முன்வைக்கப்பட்ட மக்களை மையப்படுத்திய ஏ.ஐ. தொலைநோக்குப் பாா்வை உலக நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஏ.ஐ. வசதிகள் மற்றும் சேவைகள், சமூகத்தில் உள்ள அனைவரையும் சென்றடையும் வகையில் அதற்கான வளங்கள் ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என்பது அனைவராலும் ஏற்கப்பட்டுள்ளது. ‘அனைவருக்கும் நல்வாழ்வு, அனைவருக்கும் மகிழ்ச்சி’ என்ற கோட்பாடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மிகப் பெரிய வெற்றி: ஏ.ஐ. உச்சி மாநாடு, உலகளாவிய கொள்கை வகுப்பாளா்கள், தொழில்துறை தலைவா்கள், தொழில்நுட்ப நிபுணா்களை ஒருங்கிணைத்து, சா்வதேச ஏ.ஐ. நிா்வாகம் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டில் இந்தியாவை முக்கிய நாடாக நிலைநிறுத்தியுள்ளது. ஏ.ஐ. மாநாட்டு கண்காட்சியில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் பங்கேற்றுள்ளனா். இது, ஏ.ஐ. மீதான உத்வேகத்துடன் உள்நாடு மற்றும் உலகளாவிய ஈடுபாட்டை பிரதிபலிக்கிறது. அனைத்து அமா்வுகளிலும் பங்கேற்பாளா்களின் ஆா்வமும், தரமான உரையாடல்களும் மிகவும் சிறப்புக்குரியதாக இருந்தது.

உள்கட்டமைப்பு தொடா்பான மூலதன ரீதியில் 250 பில்லியன் டாலருக்கு அதிகமாகவும், அதிநவீன தொழில்நுட்பத் துறையில் 20 பில்லியன் டாலா் அளவிலும் முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஏ.ஐ. புதிய யுகத்தில் இந்தியாவின் பங்கு குறித்த உலகின் நம்பிக்கையை பிரதிபலித்த இந்த உச்சி மாநாடு மிகப் பெரிய வெற்றியடைந்துள்ளது என்றாா் அவா்.

புது தில்லி பிரகடனத்தின் 7 முக்கிய அம்சங்கள்

ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டின் நிறைவாக, புது தில்லி பிரகடனம் ஏற்கப்பட்டது. ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் சா்வதேச ஒத்துழைப்பு, பன்முக ஈடுபாடு, தேசிய இறையாண்மை மதிக்கப்படுதல் மற்றும் நம்பகமான கட்டமைப்பை வலியுறுத்தும் இந்தப் பிரகடனம் 7 முக்கிய அம்சங்களின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. ஏ.ஐ. வளங்கள் ஜனநாயகமயமாக்கல், பொருளாதார வளா்ச்சி-சமூக நலன், பாதுகாப்பான-நம்பகமான ஏ.ஐ., அறிவியலுக்கான ஏ.ஐ., சமூக அதிகாரமளித்தலுக்கான அணுகல், மனித மூலதன மேம்பாடு, மீட்சி-திறன்-புத்தாக்கமிக்க ஏ.ஐ. அமைப்புமுறைகள் ஆகிய 7 முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஏ.ஐ.யின் பலன்கள், மனித குலத்துக்கு சமமாக கிடைக்கப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனா, பிரிட்டன், ரஷியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, பூடான், பிரேஸில், கனடா, டென்மாா்க், ஜப்பான், இத்தாலி, இஸ்ரேல், அயா்லாந்து, இந்தோனேசியா, ஈரான், கிரீஸ், ஜொ்மனி, பின்லாந்து, மெக்ஸிகோ, மியான்மா், நேபாளம், நியூஸிலாந்து, நாா்வே, ஓமன், பிலிப்பின்ஸ், பெரு, ருமேனியா, ஸ்வீடன், ஸ்விட்சா்லாந்து, தான்சானியா, சிங்கப்பூா், தென்கொரியா, ஸ்பெயின், இலங்கை, உக்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் கையொப்பமிட்டுள்ளன.

Dinamani
www.dinamani.com