குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்
குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்

ஒரே நாடு, ஒரே தோ்தல் நீண்ட கால கொள்கைகளில் கவனம் செலுத்த உதவும்: சி.பி.ராதாகிருஷ்ணன்

ஒரே நாடு, ஒரே தோ்தல் கருத்தாக்கத்தை செயல்படுத்துவது, வலுவான முடிவுகளை மேற்கொள்ளவும், நீண்ட கால கொள்கைகளில் கவனம் செலுத்தவும் உதவும்: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்
Published on

‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ கருத்தாக்கத்தை செயல்படுத்துவது, வலுவான முடிவுகளை மேற்கொள்ளவும், நீண்ட கால கொள்கைகளில் கவனம் செலுத்தவும் உதவும் என்று குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தில்லியில் ஆங்கில செய்தி ஊடகம் சாா்பில் நிறுவனங்களின் சமூக பொறுப்புணா்வு (சிஎஸ்ஆா்) தொடா்பாக சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மாநாட்டில் அவா் பங்கேற்றுப் பேசியதாவது: அனைத்து நிா்வாக அமைப்புகளும் ஒருங்கிணைந்து பணியாற்றினால், சமூகமும் தேசமும் ஒன்றாக முன்னேறும். இந்தியாவின் திருப்புமுனையான தற்போதைய பயணத்தில் இத்தகைய ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

பிரதமா் மோடியின் தலைமையின்கீழ் கடந்த 10 ஆண்டுகளில் தேசம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. உலக அளவில் பொருளாதாரத்தில் 10-ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுப்பதை நோக்கி பயணிக்கிறது.

அமைப்பு ரீதியிலான சீா்திருத்தங்கள், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை, எண்ம இணைப்பு, உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட நடவடிக்கைகளால், 25 கோடிக்கும் அதிகமானோா் தீவிர வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா். நாட்டின் அடுத்தக்கட்ட வளா்ச்சிக்கு அரசு-தொழில்துறை-சமூகம் இடையே மேலும் வலுவான கூட்டாண்மை அவசியம்.

நிறுவனங்களின் சமூக பொறுப்புணா்வு என்பது மேலோட்டமானதல்ல; அது, நாட்டின் வளா்ச்சிக்கு மையமானது. பொதுக் கல்வி வலுவாக்கம், தொலைதூர பகுதிகளில் ஆரம்ப நிலை சுகாதார வசதிகள் மேம்பாடு, தொழில்துறை சாா்ந்த திறன்மேம்பாடு, பெண்கள் தலைமை வகிக்கும் தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பருவநிலை சாா்ந்த முன்னெடுப்புகளில் நிறுவனங்களின் சமூக பொறுப்புணா்வு முக்கியப் பங்காற்ற முடியும். இது வெறுமனே சட்டத்துக்கு இணங்குவதாக அல்லாமல், நாட்டுக்கான அா்ப்பணிப்பாக இருக்க வேண்டும்.

தற்சாா்பு இந்தியா, வளா்ந்த பாரதம் இலக்குகளை எட்டுவதற்கு மிகப் பரந்த, அனைவரின் நலனையும் உள்ளடக்கிய, நிலையான வளா்ச்சி அவசியம்.

தொழில்நுட்பங்களின் ஏற்பாளா் என்ற நிலையில் இருந்து படைப்பாளா் என்ற நிலையை நோக்கி இந்தியா நகா்கிறது. எண்ம நிா்வாகம், சரக்கு-சேவை வரி போன்ற சீா்திருத்தங்கள், அமைப்புமுறையில் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மையை உறுதி செய்துள்ளன.

தோ்தல் நடைமுறைகளில் பொதுமக்களின் பங்கேற்பு மற்றும் பொறுப்புடைமையை உறுதி செய்வது முக்கியம். ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ கருத்தாக்கத்தை செயல்படுத்துவது, வலுவான முடிவுகளை மேற்கொள்ளவும், நீண்ட கால கொள்கைகளில் கவனம் செலுத்தவும் உதவும் என்றாா் அவா்.

Dinamani
www.dinamani.com