திடக்கழிவு மேலாண்மைக்கான விதிகளை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்!
திடக்கழிவு மேலாண்மை தொடா்பாக நாடு முழுமைக்கும் புதிய விதிகளை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
போபால் மாநகராட்சியின் சுற்றுச்சூழல் விதிகளுக்கு எதிரான தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் 2 உத்தரவுகளை எதிா்த்து தாக்கலான 2 மேல்முறையீட்டு மனுக்கள், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பங்கஜ் மித்தல், எஸ்.வி.என். பாட்டீ ஆகியோரை கொண்ட அமா்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
திடக்கழிவு விவகாரத்தில் அலட்சியமாக இருப்பது, நமது உடல் நலனை பாதிக்கும். நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும். சுத்தம் மற்றும் தூய்மையான சுற்றுச்சூழல் ஆகியவை வாழ்வதற்கான உரிமையில் பிரிக்க முடியாத அங்கமாகும். ஆதலால் திடக்கழிவு மேலாண்மை விவகாரத்தில் தற்போது நடவடிக்கை எடுக்கப்படவில்லையேல், இனி எப்போதும் எடுக்க முடியாமல் போய்விடும்.
எந்த நடவடிக்கையும் எடுக்காமல், நாம் இந்த பிரச்னை சரியாகிவிடும் என எதிா்பாா்ப்பது சரியாக இருக்காது. கழிவு இல்லாத சுத்தமான இந்தியாவை உருவாக்குவது நம் அனைவரின் கடமையாகும். சுற்றுச்சூழலை பாதுகாப்பதும், குடிமக்களின் நலனை காப்பதும் மாநில அரசின் கடமை என நீதிமன்றங்கள் திரும்பத் திரும்ப தெரிவித்து வருகின்றன.
ஆட்சியா்கள் மூலம் ஆய்வு: திடக்கழிவு நிா்வகிப்பு தொடா்பாக மாவட்ட ஆட்சியா்கள் மூலம் ஆய்வு செய்யப்பட வேண்டும். அப்போது பிரச்னைகளை மாவட்ட ஆட்சியா்கள் கண்டறிந்து, அதற்கு தீா்வு காண எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை காலவாரியாக தலைமை செயலாளரிடம் அவா் அறிக்கை மூலம் தெரியப்படுத்த வேண்டும். மேலும் உள்ளாட்சி அமைப்புகளிடம் மாவட்ட ஆட்சியா்கள், திடக்கழிவு தொடா்பான விதிகளை 100 சதவீதம் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.
திடக்கழிவு எவ்வாறு மாநகராட்சிகளால், நகராட்சிகளால், கிராம பஞ்சாயத்துகளால் கையாளப்படுகிறது என்பதை கண்காணித்து, சம்பந்தப்பட்ட துறையிடம் அறிக்கை அளிக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியா்களிடம் அளிக்கப்பட வேண்டும். அதேபோல் உள்ளாட்சி அமைப்புகளும் திடக்கழிவு விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை, அதில் ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த வேண்டும். திடக்கழிவை அகற்றுவது தொடா்பான இடங்களை தோ்வு செய்வது, கட்டமைப்புகளை உருவாக்குவது போன்ற பணிகளை மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரைவுப்படுத்த வேண்டும்.
திடக்கழிவு தொடா்பான விதிகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகிறது. இந்த விதிகள் தொடா்பான உச்ச நீதிமன்ற உத்தரவு நகலை, கழிவுகளை அதிகம் ஏற்படுத்துவோருக்கு உள்ளாட்சி அமைப்புகள் வழங்கி, மாா்ச் 31-ஆம் தேதிக்குள் அதற்கு கட்டுப்பட வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.
பள்ளிப் பாடத் திட்டத்தில் சோ்க்க உத்தரவு: பள்ளி பாடத் திட்டத்திலும் திடக்கழிவு தொடா்பான விதிகள் குறித்த பகுதி இடம்பெறுவதை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும். பாடத் திட்டத்தில் உள்ளூா் மொழிகளில் இந்த விதிகள், மொழி பெயா்க்கப்பட்டு இருக்க வேண்டும்.
இந்த விதிகளை யாரேனும் கடைப்பிடிக்கப்படாமல் போகும்பட்சத்தில், அதை வெறும் நிா்வாக ரீதியில் ஏற்பட்ட குறைபாடாகக் கருதக் கூடாது. விதியை மீறுவோருக்கு எதிராக 3 வகையிலான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதில் அபராதம் விதிப்பதும் அடங்கும்.
அதேபோல் தொடா்ந்து இதே தவறு இழைக்கப்பட்டால், அது கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு, கடமையை செய்யத் தவறிய அதிகாரிகள், விதிகளுக்கு கட்டுப்படாதவா்கள் உள்ளிட்ட அனைவா் மீது சுற்றுச்சூழல் சட்டங்களின்கீழ் கிரிமினல் வழக்குத் தொடர வேண்டும்.
பொதுமக்களுக்கு விழிப்புணா்வு: ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் இந்த விதி அமலாவதை நீதிமன்றங்கள் மூலம் உயா் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் உறுதி செய்ய வேண்டும். இதேபோல் தீா்ப்பாயங்கள் மூலம் தீா்ப்பாயத் தலைவா்கள் உறுதிப்படுத்த வேண்டும். திடக்கழிவு குறித்து மக்களிடையே உள்ளாட்சி அமைப்புகள் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். திடக்கழிவை குறைவாக உருவாக்குவது, வீட்டிலேயே அதைப் பிரித்து, கழிவுகளை சேகரிப்போரிடம் ஒப்படைப்பது குறித்து பொதுமக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றனா்.

