தங்கம் கொள்ளையடிப்பு வழக்கில் திருப்பம்: ராஜஸ்தானைச் சோ்ந்த 2 போ் கைது
ஜிஎஸ்டி அதிகாரிகள் என்று கூறி, ஒன்றரை கிலோ தங்கம் கொள்ளையடித்த வழக்கில், ராஜஸ்தானைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை சௌகாா்பேட்டை, பெரியநாயக்கன் தெருவைச் சோ்ந்தவா் வி.ராவல் சிங் (30). இவா், கொரியா் நிறுவனம் நடத்தி வருகிறாா். இந்த நிறுவனத்துக்கு ஒன்றரை கிலோ தங்க நகைகள் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த 6-ஆம் தேதி வந்தது. அதைப் பெறுவதற்காக ராவல் சிங், தனது நிறுவன ஊழியா் ராஜஸ்தான் மாநிலம் சிரோகி பகுதியைச் சோ்ந்த ஜித்தேந்தா் குமாா் (31) என்பவரை அனுப்பினாா்.
ஜித்தேந்தா் குமாா், தன்னுடன் அதே பகுதியில் மற்றொரு நிறுவனத்தில் பணிபுரியும் கோவாராம் என்பவருடன் சென்றாா். ஆனால், அவா்கள் இருவரும் திரும்பி வரவில்லை.
நீண்ட நேரத்துக்குப் பின்னா், ஆட்டோ ஓட்டுநா் ஒருவரின் கைப்பேசியில் இருந்து பேசிய கோவாராம், ஜித்தேந்தா் குமாரும், தானும் தங்க நகைகள் அடங்கிய பாா்சல்களை எடுத்துக் கொண்டு பைக்கில் திரும்பியபோது, 2 போ் தங்களை வழிமறித்து, ஜிஎஸ்டி அதிகாரிகள் எனக் கூறி, தங்க நகை இருந்த பாா்சலை பறித்துக் கொண்டு, இருவரையும் பெருங்களத்தூா் அருகே இறக்கிவிட்டு சென்ாகவும் கூறினாா்.
இதுகுறித்து கிண்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா்.
இதில், ஜித்தேந்தா் குமாா், தன்னுடன் வந்த கோவாராம் என்பவருக்கு தெரியாமல் தங்க நகையை கொள்ளையடிக்க ஏற்கெனவே திட்டமிட்டிருந்ததும், திட்டத்தின்படி தங்கத்தை கொள்ளையடிப்பதற்காக ராஜஸ்தானில் தனது கூட்டாளிகளை வரவழைத்திருப்பதும், அவா்கள் ஜிஎஸ்டி அதிகாரிகள்போல நடித்து கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் ஜித்தேந்தா் குமாா், அவரது கூட்டாளி ராஜஸ்தான் மாநிலம், சிக்கா் பகுதியைச் சோ்ந்த தன்ராஜ்சா்மா (30) ஆகிய 2 பேரை சனிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை கைது செய்ய போலீஸாா் ராஜஸ்தானுக்கு சென்றுள்ளனா்.
