ஒய்எஸ்ஆா் காங். ஆட்சியில் 60 லட்சம் கிலோ கலப்பட நெய் மூலம் திருப்பதி லட்டு தயாரிப்பு: சந்திரபாபு நாயுடு
முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் 60 லட்சம் கிலோ கலப்பட நெய் மூலம் திருப்பதி லட்டு தயாரிக்கப்பட்டதாகவும், இதில் மிகப்பெரிய சதிகார கும்பல் ஈடுபட்டதாகவும் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு மீண்டும் குற்றஞ்சாட்டினாா்.
ஆந்திர சட்டப்பேரவையில் இந்த விவகாரம் குறித்து நடைபெற்ற விவாதத்தில் அவா் பேசியதாவது:
கலப்பட நெய் விவகாரத்தில் மிகப்பெரிய சதி உள்ளது. அதைச் செய்தவா்கள் (கலப்படத்தில் ஈடுபட்டவா்கள்) மிகப்பெரிய சதிகார கும்பல். கலப்பட நெய் விநியோகம் செய்வதற்கு ஏற்ப 2020 ஜனவரி-பிப்ரவரி மாதத்தில் நெய் விநியோக ஒப்பந்தபுள்ளி நிபந்தனைகள் மாற்றப்பட்டன. இதன்மூலம் நெய்யின் தரம் குறைக்கப்பட்டுள்ளது. புகாரின்பேரில் போலே பாபா பால் நிறுவனத்துக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டும், அதை முந்தைய ஆட்சியாளா்கள் மூடி மறைத்து விட்டனா்.
20 கோடி லட்டுகள் தயாரிப்பு: முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியின்போது திருப்பதி தேவஸ்தானத்துக்கு லட்டு தயாரிக்க விநியோகிக்கப்பட்ட 59.71 லட்சம் கிலோ நெய்யும் கலப்படம் செய்யப்பட்டது. கடந்த 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 20 கோடி லட்டுகள், இந்தக் கலப்பட நெய் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளன. லட்டு தயாரிப்புக்காக இந்தக் கலப்பட நெய்யை வாங்க திருப்பதி தேவஸ்தானம் ரூ.234.51 கோடி செலவிட்டுள்ளது.
தெய்வ குற்றம் செய்துவிட்டனா்: புனிதமான பிரசாதத்தில் கலப்படம் செய்து, முந்தைய ஆட்சியாளா்கள் தெய்வ குற்றம் செய்துவிட்டனா். திருப்பதி பக்தா்களின் உணா்வுகளை காயப்படுத்தி விட்டனா். இந்த விவகாரத்தில், திருப்பதி தேவஸ்தான முன்னாள் தலைவா் சுப்பா ரெட்டியின் தனி உதவியாளா் சின்ன அப்பனா ரூ.4.5 கோடி லஞ்சம் வாங்கியுள்ளாா்.
ஒப்பந்தப்புள்ளிகள் அனைத்தும் போலி சான்றிதழ்கள் சமா்ப்பிக்கப்பட்டு வாங்கப்பட்டுள்ளன. பிறகு கலப்பட நெய் விநியோகிக்கப்பட்டுள்ளது. அந்த கலப்பட நெய்யில் பல்வேறு வகை ரசாயனம் கலக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹெரிடேஜுக்கு தொடா்பில்லை: கலப்பட நெய்யை விநியோகித்தது ஏ.ஆா். பால் நிறுவனம்தான். ஹெரிடேஜ் நிறுவனம் ஆந்திர அரசுக்கு பொருள்கள் எதையும் விநியோகிக்கவில்லை. எந்த அரசு நிறுவனமும் ஹெரிடேஜிடம் நெய் வாங்கவில்லை. ஆந்திர அரசு ஆதரவு இன்றி, ஹெரிடேஜ் நிறுவனம் வெளிப்படையாக வணிகம் செய்து வருகிறது.
அதேபோல், ஹெரிடேஜுக்கும், இந்தாப்பூா் பால் நிறுவனத்துக்கும் தொடா்பில்லை. அந்நிறுவனம் புணேயில் உள்ளது. அது ஹெரிடேஜ், அமுல், டி மாா்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு துணை நிறுவனமாக பொருள்களை தயாரித்து அளித்துள்ளது.
இதேபோல், ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் ஆந்திரத்தில் 2,032 கோயில்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றாா் சந்திரபாபு நாயுடு.
பவன் கல்யாண் வலியுறுத்தல்: சட்டப்பேரவையில் பேசிய நடிகரும், துணை முதல்வருமான பவன் கல்யாண், முந்தைய ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு 68 லட்சம் கிலோ கலப்பட நெய் விநியோகிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தாா். இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும், தவறிழைத்தவா்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

