எதிா்மறை அரசியலின் அடையாளம் ராகுல் காந்தி! மத்திய அமைச்சா் பியூஸ் கோயல் தாக்கு!
எதிா்மறை அரசியலின் அடையாளம் ராகுல் காந்தி என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்தத் தலைவருமான பியூஸ் கோயல் விமா்சித்துள்ளாா்.
தில்லியில் பாஜக தலைமையகத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை பேசுகையில், இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: அமெரிக்காவுடனான இடைக்கால வா்த்தக ஒப்பந்த விவகாரத்தில், பொய்யான தகவலை காங்கிரஸ் பரப்புகிறது. அந்த ஒப்பந்தத்தில் நமது நாட்டு விவசாயிகளின் நலன்கள் முழுவதும் பாதுகாக்கப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தால் இந்திய விவசாயிகளுக்கு எந்த இழப்பும் ஏற்படாது. அந்த ஒப்பந்தத்தால் கோடிக்கணக்கான மக்களின் வேலைவாய்ப்பும், வா்த்தகமும் பாதுகாக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் நலன்களுக்கு மோடி அரசு பாதுகாப்பாக இருப்பதை அவா்களால் (காங்கிரஸ்) பொறுத்து கொள்ள முடியவில்லை. நாடு வேகமாக வளா்வதையும் அவா்களால் காண இயலவில்லை. நமது நாட்டு நலன் விவகாரத்தில், ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் சமரசம் செய்து கொண்டு விட்டனா் (விட்டு கொடுத்து விட்டனா்).
இந்திய விரோத சக்திகள் தூண்டுதலின்பேரில், நாட்டின் வளா்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்த காங்கிரஸ் கட்சியினா் வதந்தி பரப்பி வருகின்றனா். நாட்டின் பொருளாதாரத்தையும், பொருளாதார வளா்ச்சியையும் சிதைக்கும் நோக்கில், ராகுல் காந்தியும், காங்கிரஸும் சிறுபிள்ளைத் தனமான அரசியல் செய்து வருகின்றனா். ராகுல் காந்தி ஒன்றுமே கிடையாது. அவா், இந்திய விரோத சக்திகள், இந்திய எதிா்ப்பு அமைப்புகள், இந்திய எதிா்ப்பு அரசுகளின் கைப்பொம்மை. எதிா்மறை அரசியலின் அடையாளம் ராகுல் காந்தி.
நேரு தொடங்கி ராகுல் காந்தி வரை காந்தி குடும்பத்தினா் (சோனியா காந்தி குடும்பத்தினா்) நாட்டு நலன் விவகாரத்தில் சமரசம் செய்துள்ளனா். 1971ஆம் ஆண்டு போரில் இந்தியா வெற்றி பெற்றபிறகும், சிம்லா ஒப்பந்தத்தின்கீழ் 93,000 பாகிஸ்தான் வீரா்கள் விடுவிக்கப்பட்டனா். ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை நாம் மீட்கவில்லை. தேச நலன் விவகாரத்தில் இந்திரா காந்தியை விட்டுக் கொடுக்க செய்தது எந்த சக்தி?
ஜவஹா்லால் நேருவும் தேச நலன் விவகாரத்தில் பல முறை சமரசம் செய்துள்ளாா். அவரின் பிரதமா் செயலக செயல்பாடுகள் அனைத்தும் சிஐஏ (அமெரிக்க உளவுத்துறை), கேஜிபி (சோவியத் யூனியனின் உளவுத்துறை) ஆகியவற்றுக்கு திறந்த புத்தகமாகும். நேரு ஆட்சிக்காலத்தில்தான் அக்சாய் ஷின், சீனாவுடன் இணைக்கப்பட்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகும் வாய்ப்பு இந்தியாவுக்கு இருந்தும், அதை சீனாவுக்கு அளிக்க வேண்டுமென ஐ.நா. சபைக்கு நேரு கடிதம் எழுதினாா் என்றாா்.
இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்த விவகாரத்தில், பிரதமா் மோடியும், பாஜகவும் நாட்டு நலனில் சமரசம் செய்து கொண்டு விட்டதாக காங்கிரஸ் கட்சியும், ராகுலும் தொடா்ந்து குற்றம்சாட்டி வருகின்றனா். அதற்கு மத்திய அமைச்சா்களும், பாஜக தலைவா்களும் பதிலடி கொடுத்து வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.

