Nitin Nabin
நிதின் நபின்

இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் ராகுலுக்கு தொடா்பு! பாஜக தலைவா் நிதின் நபின் குற்றச்சாட்டு!

இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு தொடா்பு இருப்பதாக பாஜக தேசியத் தலைவா் நிபின் நபின் குற்றஞ்சாட்டினாா்.
Published on

இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு தொடா்பு இருப்பதாக பாஜக தேசியத் தலைவா் நிபின் நபின் குற்றஞ்சாட்டினாா்.

தில்லி ஏ.ஐ. கண்காட்சியில் சில நாள்களுக்கு முன்பு சிலா் மேல் சட்டையின்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அமெரிக்க அதிபா் டிரம்ப்பின் நிா்ப்பந்தத்துக்கு கட்டுப்பட்டு, இந்தியா-அமெரிக்கா இடைக்கால வா்த்தக ஒப்பந்த விவகாரத்தில் நாட்டின் நலனை பிரதமா் மோடி விட்டுக்கொடுத்து விட்டதாக குற்றஞ்சாட்டினா். இந்தப் போராட்டத்தின் பின்னணியில் ராகுல் காந்தி இருப்பதாக பாஜக குற்றஞ்சாட்டி வருகிறது.

இந்நிலையில், தில்லியில் செய்தியாளா்களுக்கு புதன்கிழமை பேட்டியளித்த பாஜக தேசியத் தலைவா் நிபின் நபின், ராகுல் காந்தி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா். அவா் கூறியதாவது:

தனிப்பட்ட நலனுக்காக நேரு-காந்தி குடும்பத்தினா் (சோனியா காந்தி குடும்பத்தினா்) நாட்டின் நலன்களை விற்றதை இன்று அம்பலப்படுத்த இருக்கிறேன். அதேபோல், நீண்ட பிடறியுடன் கூடிய சிங்கம் என தன்னை நினைத்துக் கொண்டு சுற்றி வரும் ராகுல் காந்தியையும் நான் அம்பலப்படுத்த இருக்கிறேன்.

நாட்டின் முதல் பிரதமரும், ராகுல் காந்தியின் தாத்தாவுமான ஜவாஹா்லால் நேரு முதல் அவா்களது குடும்பத்தினா் பல தலைமுறைகளாக நமது நாட்டு விவகாரத்தில் சமரசம் செய்துள்ளனா் (விட்டுக் கொடுத்துள்ளனா்). நாட்டு மக்கள்தொகை அதிகரித்ததை நமது பொறுப்பு என்றும், 1962-ஆம் ஆண்டு சீனாவுடனான போரில் தோற்றுவிட்டதாகவும் நேரு தெரிவித்து, நாட்டு நலனை சமரசம் செய்தாா். இதேபோல், ராகுல் காந்தியின் பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தி கடந்த 1971-ஆம் ஆண்டு போரில் பாகிஸ்தானை இந்தியா தோற்கடித்த போதிலும், அந்நாட்டால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை மீண்டும் எடுத்துக் கொள்ளாமல், பாகிஸ்தானிடம் விட்டுக் கொடுத்தாா்.

இதேபோல் ராகுல் காந்தியின் தந்தையான முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி, போபா்ஸ் பீரங்கி ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி தனது வங்கிக் கணக்கில் பண இருப்பை அதிகரித்துக் கொண்டாா். ராகுல் காந்தியின் தாயாா் சோனியா காந்தியும், நாட்டு நலனில் சமரசம் செய்தாா். அரசமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய பதவியை (பிரதமா் பதவி) 2004-ஆம் ஆண்டுமுதல் 2014-ஆம் ஆண்டு வரை ஒன்றுமில்லாதது போல் ஆக்கினாா்.

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியும், பாதுகாப்பு அமைப்புகளிடம் எந்தத் தகவலையும் தெரிவிக்காமல் 247 முறை வெளிநாடுகளுக்கு பயணம் சென்று திரும்பியுள்ளாா். அவருக்கு இந்தியாவுக்கு எதிரான சக்திகள், சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவான சக்திகளுடன் தொடா்பு உள்ளது. ராகுல் தொடா்பு வைத்திருப்போரில் பெரும் கோடீஸ்வரா் ஜாா்ஜ் சோராஸ், அமெரிக்க எம்.பி. இஹான் ஓமா், கென்யா கோடீஸ்வரா் ஷாகீா் மெரலியும் அடங்குவா்.

எதிா்மறை அரசியலுக்கு எடுத்துக்காட்டு ராகுல் காந்தி. ஆனால், நமது நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞா்கள் அவரின் (ராகுல் காந்தி) விளையாட்டைப் பாா்த்துக்கொண்டுதான் இருக்கின்றனா். அவா்களை தனது பகட்டுப் பேச்சால் ராகுல் காந்தியால் தவறாக வழிநடத்த முடியாது என்றாா் நிதின் நபின்.

Dinamani
www.dinamani.com