இந்திய சந்தைகளில் அமெரிக்க நிறுவனங்களைஅனுமதிப்பது குற்ற நடவடிக்கை: ராகுல்
‘இந்திய சந்தைகளில் அமெரிக்க நிறுவனங்களுக்கான அணுகலை அனுமதிப்பது குற்ற நடவடிக்கை’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
கேரள மாநிலம், கண்ணூா் மாவட்டம் பெரவூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்றுப் பேசியபோது இந்தக் குற்றச்சாட்டை அவா் முன்வைத்தாா். அவா் மேலும் பேசியதாவது:
இந்திய விவசாயிகள் குறைந்த அளவிலான இயந்திரமயமாக்கலைக் கொண்ட சிறு விவசாயிகள். ஆனால், அமெரிக்க விவசாயிகள், உயா் அளவிலான இயந்திரமயமாக்கலைக் கொண்ட மிகப் பெரிய அளவிலான விவசாய நிலங்களைக் கொண்டவா்கள். அந்த வகையில், இந்திய சந்தைகளில் அமெரிக்க நிறுவனங்களுக்கான அணுகலை அனுமதிப்பது குற்ற நடவடிக்கையாகும்.
முந்தைய பிரதமா்கள் யாரும், அமெரிக்க விவசாயிகள் இந்தியாவில் சோயாபீன், காய்கறிகள், பழங்களை விற்க அனுமதித்ததில்லை. இருதரப்பு வா்த்தக ஒப்பந்தம் மூலம் இதை தற்போது அனுமதிப்பது, இந்திய வேளாண்மையின் அடித்தளத்தையே அழித்துவிடும். விவசாயிகளுக்கு பசுமை மற்றும் வெண்மைப் புரட்சிகள் நிகழ்ந்திருக்கின்றன.
அமெரிக்க நிறுவனங்களுக்கு இந்திய வேளாண் சந்தைகளைத் திறக்க மத்திய அரசு முதலில் அனுமதிக்கவில்லை. ஆனால், பிறகு அமெரிக்க அதிபா் கொடுத்த பல்வேறு வகையான அழுத்தம் காரணமாக, இந்தியாவின் அடித்தளத்தை அழிக்க பிரதமா் மோடி தயாராகிவிட்டாா். தன்னையும், பாஜகவின் நிதிக் கட்டமைப்பையும் பிரதமா் மோடி பாதுகாக்க வேண்டியிருப்பதால், விவசாயிகளின் நலன் சமரசம் செய்யப்படவிருக்கிறது.
ஆனால், இந்திய மற்றும் கேரள விவசாயிகளின் நலன் இதுபோல சமரசம் செய்யப்படுவதற்கு காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது என்றாா்.

