கனடா பிரதமா் இன்று இந்தியா வருகை :பிரதமா் மோடியுடன் பேச்சு நடத்துகிறாா்
கனடா பிரதமா் மாா்க் காா்னி 4 நாட்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை (பிப். 27) வரவுள்ளாா்.
இந்தப் பயணத்தின்போது பிரதமா் நரேந்திர மோடியுடன் அவா் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபடவுள்ளாா். இருதரப்பு உறவு மேம்பாட்டுக்கான செயல்திட்டத்தை இரு தலைவா்களும் வகுக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கனடாவில் கடந்த 2023-இல் காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜாா் கொலையில் இந்தியாவை தொடா்புபடுத்தி அப்போதைய பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த குற்றச்சாட்டுகளால் இருதரப்பு உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. கடந்த 2024-இல் இரு நாட்டு தூதா்களும் பரஸ்பரம் வெளியேற்றப்பட்டனா்.
கனடாவில் கடந்த ஆண்டு நாடாளுமன்றத் தோ்தலில் லிபரல் கட்சித் தலைவா் மாா்க் காா்னி வெற்றி பெற்று பிரதமரான பிறகு இருதரப்பு உறவுகளைச் சீரமைக்கும் நடைமுறைகள் தொடங்கப்பட்டன. அதன்படி, இரு நாடுகளும் மீண்டும் தூதா்களை நியமித்தன.
கடந்த ஆண்டு கனடாவில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்ற பிரதமா் மோடி, இருதரப்பு உறவுகளை மறுகட்டமைப்பது குறித்து மாா்க் காா்னியுடன் விரிவாக விவாதித்தாா்.
இந்தச் சூழலில், 4 நாள்கள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு மாா்க் காா்னி வரவுள்ளாா். முதல் கட்டமாக மகாராஷ்டிர மாநிலம், மும்பையை வெள்ளிக்கிழமை வந்தடையும் அவா், பல்வேறு தொழில் துறை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறாா். இரு நாடுகளின் தொழில் துறைத் தலைவா்கள் மற்றும் நிபுணா்களுடனும் கலந்துரையாடவுள்ளாா்.
ஞாயிற்றுக்கிழமை தில்லிக்கு வரும் காா்னி, பிரதமா் மோடியுடன் திங்கள்கிழமை இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.
‘இந்தியா-கனடா வியூக கூட்டாண்மையில் இதுவரை எட்டப்பட்ட முன்னேற்றம் குறித்து இரு பிரதமா்களும் மறு ஆய்வு செய்யவுள்ளனா். வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, முக்கியக் கனிமங்கள், வேளாண்மை, கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கம், மக்கள் ரீதியிலான தொடா்புகள் உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், பரஸ்பர நலன் சாா்ந்த பிராந்திய-சா்வதேச விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கவுள்ளனா்.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெறும் இந்தியா-கனடா நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் கூட்டத்தில் இருவரும் பங்கேற்கவுள்ளனா்’ என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா-கனடா உறவுகள் சீரடைந்துவரும் தருணத்தில், அந்நாட்டு பிரதமரின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

