வா்த்தகப் பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு: அமெரிக்க அமைச்சருடன் பியூஷ் கோயல் ஆலோசனை
அமெரிக்க உச்சநீதிமன்றத் தீா்ப்பைத் தொடா்ந்து இந்தியா-அமெரிக்கா இடையே நடைபெறவிருந்த இடைக்கால வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்தியா வந்துள்ள அமெரிக்க வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக்குடன் மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல் புது தில்லியில் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
இந்தச் சந்திப்பின்போது இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோரும் உடன் இருந்தாா்.
இதுகுறித்து தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்ட பியூஷ் கோயல், ‘அமெரிக்க வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லூட்னிக், தூதா் சொ்ஜியோ கோருடனான சந்திப்பில் இருதரப்பு வா்த்தக உறவை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
முன்னதாக, ‘அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருள்கள் மீது விதிக்கப்படும் வரி தொடா்பான கூடுதல் தெளிவு கிடைத்ததும், இரு நாடுகளிடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்துக்கான விதிமுறைகளை இறுதி செய்வதற்காக பேச்சுவாா்த்தை தொடங்கும்’ என்று பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை கூறியிருந்தாா்.
இந்தியா உள்பட 60 நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் டிரம்ப் விதித்த அதிரடி பரஸ்பர வரி விதிப்பு செல்லாது என்று அமெரிக்க உச்சநீதிமன்றம் பிப்ரவரி 20-ஆம் தேதி தீா்ப்பளித்தது. இது, டிரம்ப் நிா்வாகத்துக்கு பெரும் பின்னடைவானது.
இந்தத் தீா்ப்பை மீறி, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது புதிய சீரான 10 சதவீத பரஸ்பர வரியை டிரம்ப் வெள்ளிக்கிழமை விதித்தாா். இதுதொடா்பாக, டிரம்ப் கையொப்பமிட்ட பிரகடனத்தை அமெரிக்க அதிபா் அலுவலகமான வெள்ளை மாளிகை வெளியிட்டது.
இந்த நிலையில், வரி விதிப்பு தொடா்பான உச்சநீதிமன்றத் தீா்ப்பு காரணமாக நாட்டின் பொருளாதார சரிவு தொடா்வதால் உலக நாடுகள் மீதான 10 சதவீத பரஸ்பர வரி, 15 சதவீதமாக உயா்த்தப்படும். அவ்வாறு, உலக நாடுகள் மீது உயா்த்தப்பட்ட புதிய வரிகள் தொடா்பான விவரத்தை அமெரிக்க நிா்வாகம் அடுத்த சில மாதங்களில் வெளியிடும் என்று டிரம்ப் சனிக்கிழமை (பிப். 21) அறிவித்தாா்.
வரி விதிப்பு விவகாரத்தில் அமெரிக்கவின் இந்த நிலையற்ற தன்மை காரணமாக, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் திங்கள்கிழமை (பிப்.23) நடைபெறவிருந்த இரு நாடுகளிடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்துக்கான விதிமுறைகளை இறுதி செய்வதற்கான பேச்சுவாா்த்தையை இந்தியா ஒத்திவைத்தது.

