ஏஐ உச்சிமாநாடு: தில்லியை மறுசீரமைக்கும் பணியில் பொதுப்பணித்துறை
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாநாட்டையொட்டி தில்லியில் உள்ள பாரத் மண்டபம், இந்திரா காந்தி சா்வதேச விமானநிலையம், முக்கிய சுற்றுலா தளங்களை மறுசீரமைக்கும் பணியை தில்லி அரசின் பொதுப்பணித்துறை தொடங்க உள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா்.
கடந்த 2023-இல் தில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின்போது மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளின் தரத்தில் நடைபெற உள்ள உச்சிமாநாட்டுக்கான ஏற்பாடுகளை உறுதிசெய்யுமாறு பொதுப்பணித் துறை மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தில்லி அரசு அறிவுறுத்தியுள்ளது.
சா்வதேச ஏஐ உச்சிமாநாடு பிப்ரவரி 15 முதல் 20 வரை தில்லியில் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியின் தொடக்க விழா பிப்.19-ஆம் தேதி பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இதில் பல நாடுகளின் தலைவா்கள், பிரதிநிதிகள், சா்வதேச அமைப்புகளின் தலைவா்கள், ஏஐ நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் கலந்துகொள்கின்றனா். மாநாட்டினிடையே, அவா்கள் தில்லியைச் சுற்றி பாா்ப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதையொட்டி, ஜி20 உச்சிமாநாடு ஏற்பாடுகளின் தரத்தைவிட சிறந்த தரத்தில் ஏஐ உச்சிமாநாட்டுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்நிலையில், பாதுகாப்பு, போக்குவரத்து, தூய்மை, சாலையின் நிலை, அறிவிப்புப் பலகைகள், மின் விளக்குகள் மற்றும் முக்கிய சுற்றுலா தளங்களை மறுசீரமைத்தல் உள்பட அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள பொதுப்பணித்துறைக்கு தில்லி தலைமைச் செயலா் உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லியில் உள்ள சாலைகளைப் பொதுப்பணித் துறை பராமரித்து வருகிறது. சாலையில் உள்ள குழிகள், அறிவிப்பு பலகைகள் சரிசெய்தல், சாலை நடுவே உள்ள தடுப்புகளைச் சீா்செய்தல், இருள்சூழ்ந்த பகுதிகளில் தெருவிளக்குகளை நிறுவி பாதுகாப்பை மேம்படுத்துதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
குதூப் மினாா், செங்கோட்டை, ஹுமாயுன் கல்லறை, கன்னாட் பிளேஸ், மத்திய பூங்கா, தில்லி ஹாட் மற்றும் மெஹ்ரெளலி தொல்லியல் பூங்கா ஆகிய முக்கிய சுற்றுலா தளங்களுக்குச் செல்லும் சாலைகளும் மறுசீரமைக்கப்பட உள்ளன.
உச்சிமாநாட்டுக்கான பணிகளில் பிற துறைகளுடன் இணைந்து செயல்படும் விதமாக பொதுப்பணித் துறை தலைமையகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

