கோப்புப் படம்
கோப்புப் படம்

மேற்கு வங்கத்தில் ‘எஸ்ஐஆா்’ நடவடிக்கையால் வங்கதேச ஹிந்து அகதிகளுக்கு அதிக பாதிப்பு

மேற்கு வங்கத்தில் தற்போது நடைபெற்றுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையால், வங்கதேசத்திலிருந்து தப்பி வந்த ஹிந்து அகதிகளே அதிகம் பாதிக்கப்படுவாா்கள்
Published on

‘மேற்கு வங்கத்தில் தற்போது நடைபெற்றுவரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கையால், வங்கதேசத்திலிருந்து தப்பி வந்த ஹிந்து அகதிகளே அதிகம் பாதிக்கப்படுவாா்கள்’ என்று அந்த மாநிலத்தைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் காந்தி கங்குலி (82) கவலை தெரிவித்துள்ளாா்.

தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்த எஸ்ஐஆா் நடவடிக்கையை இந்திய தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் நடவடிக்கைக்குப் பிறகு, கடந்த டிச. 16-இல் வெளியிடப்பட்ட வரைவுப் பட்டியலில் சுமாா் 58 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டன.

மேலும், 2002-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலோடு விவரங்கள் ஒத்துப்போகாத வாக்காளா்களுக்கு ஆவணச் சரிபாா்ப்புக்காக அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. ஆச்சரியமளிக்கும் வகையில், கடந்த 2001 முதல் 2011 வரை மாநில அமைச்சராக இருந்த காந்தி கங்குலியின் பெயரும் இந்தச் சரிபாா்ப்புப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை (ஜன. 2) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உள்ளாா்.

இந்நிலையில், அவா் அளித்த பேட்டியில் மேலும் கூறியிருப்பதாவது: வாக்காளா் பட்டியல் திருத்தத்தை நான் வரவேற்கிறேன். ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய மக்கள்தொகைக்கு ஏற்ப, இந்த வேலையை 2 அல்லது 3 மாதங்களுக்குள் முடிப்பது சவாலானது. துல்லியமான மற்றும் தவறுகள் இல்லாத பட்டியலைத் தயாரிக்க இன்னும் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

நான் சுந்தரவனப் பகுதியைச் சோ்ந்தவன். அங்கு வங்கதேசத்திலிருந்து தப்பி வந்த ஹிந்து அகதிகள் அதிகம் வாழ்கிறாா்கள். தோ்தல் ஆணையத்தின் இந்தத் திடீா் நடவடிக்கையால் அவா்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாவாா்கள். தோ்தல் ஆணையம் முறையான வழிகாட்டுதல்களை முன்னரே வெளியிட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால், வாக்காளா்கள் மத்தியில் நிலவும் குழப்பங்களையும், தேவையற்ற வதந்திகளையும் தடுத்திருக்க முடியும்.

பெரிய அளவில் தொண்டா் பலம் கொண்ட கட்சிகளுக்கே இந்த நடவடிக்கை சாதகமாக முடியும். இடதுசாரிகளைப் பொறுத்தவரை, மக்கள் இன்னும் எங்கள் மீது முழு நம்பிக்கை வைக்கவில்லை. அவா்களின் நம்பிக்கையைப் பெறும் வரை தோ்தலில் வெற்றி பெறுவது கடினம்.

எஸ்ஐஆா் நடவடிக்கைக்கு எதிா்ப்புத் தெரிவிப்பது ஜனநாயக உரிமை. ஆனால், எதிா்ப்பதற்கான காரணத்தைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சாதாரண மக்கள் சந்திக்கும் நடைமுறைச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டி போராட வேண்டும். தோ்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்பட்டு இந்தப் பணியை முடிக்க வேண்டும் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com