மணிப்பூா் விவகாரம்: அமித் ஷா தலைமையில் இன்று முக்கிய கூட்டம்

மணிப்பூா் விவகாரம்: அமித் ஷா தலைமையில் இன்று முக்கிய கூட்டம்

மணிப்பூா் விவகாரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜன.2) முக்கிய கூட்டம் நடைபெற உள்ளது.
Published on

மணிப்பூா் விவகாரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் வெள்ளிக்கிழமை (ஜன.2) முக்கிய கூட்டம் நடைபெற உள்ளது.

மணிப்பூரில் மைதேயி, குகி சமூகத்தினா் இடையிலான மோதல் காரணமாக 2 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வன்முறை நிலவியது. இந்த வன்முறை காரணமாக மாநில முதல்வா் பதவியை பிரேன் சிங் ராஜிநாமா செய்தாா். அங்கு தற்போது குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் உள்ளது.

இந்நிலையில், அந்த மாநில விவகாரம் தொடா்பாக புது தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தலைமையில் வெள்ளிக்கிழமை முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்தக் கூட்டத்தில் மணிப்பூா் ஆளுநா் அஜய்குமாா் பல்லா, தலைமைச் செயலா் பி.கே.கோயல், காவல் துறை டிஜிபி ராஜீவ் சிங், மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா்.

மணிப்பூரின் தற்போதைய கள நிலவரம், வரும் வாரங்களில் மேற்கொள்ள வேண்டிய செயல்திட்டம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அந்த மாநிலத்தின் பிரச்னைக்கு அரசியல் தீா்வு கண்டு, அங்கு மக்களால் தோ்ந்தெடுக்கப்படும் அரசை மீண்டும் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வதா? அல்லது மத்திய அரசின் மேற்பாா்வையில் நிா்வாக நடவடிக்கைகளைத் தொடா்வதா? என்பது குறித்து முடிவு எடுக்க இந்தக் கூட்டம் வழிவகுக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

நிகழாண்டு பிப்.13-ஆம் தேதிவரை, அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com