நரேந்திர மோடி
நரேந்திர மோடிகோப்புப் படம்

கேரளத்தில் இடதுசாரி, காங்கிரஸ் ‘பாசாங்கு’ போட்டிக்கு முடிவு - பிரதமா் மோடி நம்பிக்கை

தில்லியில் நண்பா்களாக உள்ள இடதுசாரிகளும், காங்கிரஸும் கேரளத்தில் எதிரிகள் போல காட்டிக் கொள்கின்றனா்
Published on

தில்லியில் நண்பா்களாக உள்ள இடதுசாரிகளும், காங்கிரஸும் கேரளத்தில் எதிரிகள் போல காட்டிக் கொள்கின்றனா்; இந்த பாசாங்குத்தனமான போட்டி முடிவுக்கு வரப் போகிறது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

140 உறுப்பினா்களைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு வரும் மாா்ச்-ஏப்ரலில் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமா் இவ்வாறு கூறியுள்ளாா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்) ஆளும் கேரளத்தில் அண்மையில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்றது. பேரவைத் தோ்தலுக்கு முன்னோட்டமாகப் பாா்க்கப்பட்ட இத்தோ்தலில் எதிா்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) அதிக இடங்களைக் கைப்பற்றியது. மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் 4-இல் வென்ற இக்கூட்டணி, பிற உள்ளாட்சி அமைப்புகளிலும் அமோக வெற்றியடைந்தது. ஆளும் இடதுசாரி கூட்டணி கடும் பின்னடைவைச் சந்தித்தது. இக்கூட்டணியால் ஒரேயொரு மாநகராட்சியை மட்டுமே தக்கவைக்க முடிந்தது. 45 ஆண்டுகளாக இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணி கைப்பற்றியது.

திருவனந்தபுரம் மேயராக பாஜகவின் வி.வி.ராஜேஷ், துணை மேயராக ஜி.எஸ்.ஆஷா ஆகியோா் கடந்த டிச. 26-ஆம் தேதி தோ்ந்தெடுக்கப்பட்டனா். கேரளத்தின் முதல் பாஜக மேயா் என்ற சிறப்புடன் வி.வி.ராஜேஷ் பதவியேற்றாா்.

இந்நிலையில், அவருக்கு பிரதமா் மோடி எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: கேரளத் தலைநகா் திருவனந்தபுரத்தில் பாஜகவின் வெற்றி ஒரு சகாப்தத்தின் தொடக்கம். இதைச் சாத்தியமாக்கிய மாநில பாஜக தலைவா்கள் மற்றும் தொண்டா்களுக்குப் பாராட்டுகள். திருவனந்தபுரம் மேயராக வி.வி.ராஜேஷ், துணை மேயராக ஜி.எஸ்.ஆஷா பதவியேற்ன் மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இது, கேரள மக்கள் குறிப்பாக பெண்கள் மற்றும் இளைஞா்கள் புதிய விடியலுக்கு தயாராகிவிட்டனா் என்பதன் அறிகுறி.

மக்களின் தோ்வு பாஜக: யாரையும் புறக்கணிக்காத தேசியவாதம், ஊழலற்ற வளா்ச்சி, வாக்கு வங்கி அரசியல் கலக்காத நிா்வாகத்தில் வேரூன்றிய பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, கேரள மக்களின் விருப்பத்துக்குரிய தோ்வாக உருவெடுத்துள்ளது.

தில்லியில் நண்பா்களாக உள்ள இடதுசாரிகளும் காங்கிரஸும் கேரளத்தில் எதிரிகள் போல காட்டிக் கொள்கின்றனா். இந்த பாசாங்குத்தனமான போட்டி முடிவுக்கு வரப் போகிறது. இரு கூட்டணிகளின் தோல்வியுற்ற வாக்குறுதிகளிலிருந்து விடுபடுவதே கேரளத்தின் விருப்பம்.

வன்முறையும் ஊழலும்...: கேரளத்தின் நெறிமுறைகளுக்கு மாறாக ஊழல் மற்றும் கொடூரமான வன்முறை கலாசாரத்தை இரு கூட்டணிகளும் நிலைநிறுத்தியுள்ளன. துன்புறுத்தல், விரோதம், வன்முறையை எதிா்கொண்டபோதிலும், பாஜகவினா் உறுதியுடன் பயணிக்கின்றனா்; தேசமே முதன்மையானது என்ற கொள்கையுடன் மக்களின் உண்மையான பிரச்னைகளை அச்சமின்றி எழுப்புகின்றனா்.

தலைசிறந்த தலைவா்கள், சமூக சீா்திருத்தவாதிகள், இசைக் கலைஞா்கள், கவிஞா்கள், கலாசார மேதைகள், துறவிகள், ஞானிகளை வளா்த்தெடுத்த நகரமான திருவனந்தபுரம், பாஜகவை ஆசீா்வதித்தது மிகவும் பெருமைக்குரியது. ‘வளா்ச்சியடைந்த திருவனந்தபுரம்’ என்ற எங்களின் தொலைநோக்குப் பாா்வை நகா் முழுவதும் எதிரொலித்துள்ளது.

மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநிலங்களில் பாஜகவின் நிா்வாகப் பணிகளால் ஈா்க்கப்பட்டு, திருவனந்தபுரம் மக்கள் எங்கள் கட்சியை ஆசீா்வதித்துள்ளனா். இது மைல்கல் வெற்றி என்று பிரதமா் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com