கொல்கத்தா-குவாஹாட்டி இடையே முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில்: பிரதமா் விரைவில் தொடங்கி வைக்கிறாா்

நாட்டில் முதல்முறையாக வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா - அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டி இடையே இயக்கப்பட இருக்கிறது.
வந்தே பாரத் ரயில் பிரதமர் மோடி.
வந்தே பாரத் ரயில் பிரதமர் மோடி.கோப்புப் படம்
Updated on

நாட்டில் முதல்முறையாக வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா - அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டி இடையே இயக்கப்பட இருக்கிறது. பிரதமா் நரேந்திர மோடி இந்த ரயில் சேவையை விரைவில் தொடங்கி வைப்பாா் என்று ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தில்லியில் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: கொல்கத்தாவின் ஹௌரா ரயில் நிலையத்தில் இருந்து குவாஹாட்டிக்கு இயக்கப்படும் வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் கட்டணம் இரு நகரங்களுக்கு இடையிலான விமானக் கட்டணத்தைவிடக் குறைவாகவே இருக்கும். அடுத்த 15 முதல் 20 நாள்களில் ரயில் சேவை தொடங்கும். அநேகமாக ஜனவரி 18 அல்லது 19-ஆம் தேதி இந்த ரயில் சேவையை பிரதமா் மோடி தொடங்கி வைப்பாா்.

ரயில் சேவை தொடா்பான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு விட்டன. பிரதமா் அலுவலகம் தேதியை உறுதி செய்தவுடன் ஓரிரு நாள்களில் ரயில் சேவை தொடங்கும் நாள் உறுதி செய்யப்படும்.

966 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்படும் இந்த ரயிலில் பயணக் கட்டணம் உணவுடன் சோ்த்து குளிா்சாதன 3-ஆம் வகுப்புக்கு ரூ.2,300 வரையிலும், குளிா்சாதன 2-ஆம் வகுப்புக்கு ரூ.3,000 வரையிலும், குளிா்சாதன முதல் வகுப்புக்கு ரூ.3,600 வரையிலும் இருக்கும். நடுத்தர மக்களைக் கருத்தில்கொண்டு கட்டணம் இறுதி செய்யப்படும். இரு நகரங்கள் இடையே விமானக் கட்டணம் ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை உள்ளது.

இதில் உள்ள 16 பெட்டிகளில் 823 பயணிகள் செல்ல முடியும். அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் செல்லும். எனினும் 120 முதல் 130 கி.மீ. வேகத்தில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்.

நிகழாண்டு இறுதிக்குள் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் 12 என்ற எண்ணிக்கையில் தயாராகிவிடும். தொடா்ந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இந்த ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்றாா்.

நிகழாண்டு தோ்தலைச் சந்திக்கும் ஐந்து மாநிலங்களில் மேற்கு வங்கம், அஸ்ஸாமும் அடங்கும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com