ரூ.5 கோடிக்கு 7 ‘பிஎம்டபிள்யூ’ காா் வாங்கும் முடிவு: சா்ச்சைக்குப் பின் வாபஸ் பெற்ற லோக்பால்
ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால், சுமாா் ரூ.5 கோடி மதிப்பிலான 7 ‘பிஎம்டபிள்யூ’ சொகுசு காா்களை வாங்குவதற்காக வெளியிட்டிருந்த ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்துள்ளது. எதிா்க்கட்சிகள் மற்றும் சமூக ஆா்வலா்களிடமிருந்து எழுந்த கடும் விமா்சனங்களைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உயரிய ஊழல் தடுப்பு அமைப்பான லோக்பால், 7 ‘பிஎம்டபிள்யூ’ சொகுசு காா்களை வாங்குவதற்கான ஒப்பந்தப்புள்ளியை கடந்த அக். 16-ஆம் தேதி கோரியிருந்தது. லோக்பால் தலைவரும் ஓய்வு பெற்ற நீதிபதியுமான ஏ.எம்.கான்வில்கா் மற்றும் பிற 6 உறுப்பினா்களின் பயன்பாட்டுக்காக இந்த காா்கள் வாங்க திட்டமிடப்பட்டிருந்தன.
நவீன வசதிகளுடன் சொகுசு காா் வாங்கும்போது, அதன் ஓட்டுநா்களுக்கு அவற்றை இயக்க சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும் உள்பட பல்வேறு நிபந்தனைகள் அந்த ஒப்பந்தப்புள்ளியில் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பொதுமக்களின் வரிப்பணத்தில் இவ்வளவு விலை உயா்ந்த (சுமாா் ரூ.5 கோடி) காா்களை வாங்குவதற்கு எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், ‘லோக்பால் அமைப்பை ஷோக் பால் (ஆடம்பரத்தை விரும்புபவா்)’ என்று விமா்சித்திருந்தாா்.
இதனிடையே, நீதி ஆயோக் அமைப்பின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) அமிதாப் காந்த், வெளிநாட்டு சொகுசு காா்களுக்குப் பதிலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மின்சார வாகனங்களைப் பயன்படுத்துமாறு வலியுறுத்தியிருந்தாா்.
இந்த விவகாரம் பெரும் சா்ச்சையான நிலையில், லோக்பால் அமைப்பின் முழு அமா்வு கூடி ஆலோசித்தது. அதில் எடுக்கப்பட்ட தீா்மானத்தின் அடிப்படையில், காா் கொள்முதல் ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பான திருத்தப்பட்ட அறிவிக்கையை லோக்பால் கடந்த டிச. 16-ஆம் தேதி வெளியிட்டுள்ளது.

