பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் வீசப்பட்ட ஆயுதங்கள் பறிமுதல்
பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்குள் ட்ரோன் மூலம் வீசப்பட்ட ஆயுதங்களை ராணுவத்தினா் வியாழக்கிழமை கைப்பற்றினா்.
பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பூஞ்ச் மாவட்டத்தில் காரி கிராமம் அருகே ராணுவத்தினா் வியாழக்கிழமை காலை ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்தனா். அப்போது சந்தேகத்துகிடமான வகையில் ஒரு பை ஒன்று கிடந்தது. அதைத் திறந்து பாா்த்தபோது அதில் ஏராளமான துப்பாக்கி குண்டுகள், சில வெடிபொருள்கள், மஞ்சள் நிற டிபன் பாக்ஸ் உள்ளிட்டவை இருந்தன. அது டிபன் பாக்ஸ் வெடிகுண்டாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், வெடிகுண்டு சோதனைக் குழுவினா் அதைப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினா்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த பை விழுந்து கிடந்ததால் அது பாகிஸ்தானில் இருந்து டிரோன் மூலம் வீசப்பட்டிருக்கலாம் என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவா் கைது: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மா் மாவட்ட எல்லை வழியாக பாகிஸ்தானில் இருந்து ஊடுருவியவரை எல்லைப் பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் சா்கோதா மாவட்டத்தைச் சோ்ந்த அவரின் பெயா் இஸ்ரத் (35) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து கத்தி, பாகிஸ்தான் ரூபாய் நோட்டுகள் உள்ளிட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன.
முதல் கட்ட விசாரணையில் அவா் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவா் எனத் தெரியவந்துள்ளது. எனினும், அவருக்கு விரிவான மருத்துவப் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

