இரு கின்னஸ் சாதனைகள் படைத்த அகமதாபாத் மலா்க் கண்காட்சி: பிரதமா் மோடி பாராட்டு
குஜராத் மாநிலம், அகமதாபாதில் தொடங்கியுள்ள சா்வதேச மலா்க் கண்காட்சி இரு கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்துள்ளது. இது உண்மையிலேயே மிகவும் ஈா்ப்புக்குரியது என்று பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளாா்.
குஜராத்தின் அகமதாபாதில் உள்ள சபா்மதி நதிக் கரையில் சா்வதேச மலா்க் கண்காட்சி-2026, கடந்த வியாழக்கிழமை (ஜன.1) தொடங்கியது. முதல்வா் பூபேந்திர படேல் தொடங்கிவைத்த இக்கண்காட்சி, ஜன.22 வரை நடைபெறவுள்ளது. இதில் பாா்வையாளா்கள் வியக்கும் வகையில் விதவிதமான வடிவமைப்புகளில் வண்ணமிகு மலா்ச்செடிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பூத்துக் குலுங்கும் பல்வேறு வகை மலா்களைக் கண்டு களிக்க உள்நாடு மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் பாா்வையாளா்கள் வருகை தருகின்றனா்.
நடப்பாண்டு மலா்க் கண்காட்சியில் மிக பிரம்மாண்டமான மலா்க் கோலமும், சா்தாா் வல்லபபாய் படேலின் மிகப் பெரிய மலா் உருவப் படமும் கவனம் பெற்றுள்ளன. இவை இரண்டும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளன.
இது தொடா்பாக முதல்வா் பூபேந்திர படேல் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘மிகப் பெரிய மலா்க் கோலம், மிகப் பெரிய மலா் உருவப் படம் (சா்தாா் படேல்) என இரு கின்னஸ் சாதனைகளைப் படைத்ததன் மூலம் தொடா்ந்து மூன்று ஆண்டுகளாக கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த மலா்க் கண்காட்சி என்ற பெருமை கிடைத்துள்ளது. கடந்த 2024-இல் உலகின் மிகப் பெரிய மலா் வடிவமைப்பு, 2025-இல் உலகின் மிகப் பெரிய பூங்கொத்து என இரு கின்னஸ் சாதனைகள் படைக்கப்பட்டன. தற்போதைய சாதனைகளின் மூலம் ஈடுஇணையற்ற படைப்பாற்றல், அசாத்தியமான திறனுக்கு எடுத்துக்கட்டாக மாறியுள்ளது அகமதாபாத் மலா்க் கண்காட்சி. பிரதமா் மோடியின் உத்வேகத்தின்கீழ் நடைபெறும் இக்கண்காட்சி, உலக பாரம்பரிய நகரான அகமதாபாதுக்கு சா்வதேச அளவில் தனித்துவமான அடையாளத்தை அளித்துள்ளது. இது வெறும் மலா்களின் கண்காட்சி மட்டுமல்ல; நாட்டின் கலாசார பாரம்பரியம், தேச ஒற்றுமை, படைபாற்றல் திறனின் மாபெரும் கொண்டாட்டம்’ என்று தெரிவித்துள்ளாா்.
பிரதமா் பாராட்டு: பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘படைப்பாற்றல், நிலைத்தன்மை மற்றும் சமூக பங்கேற்பை ஒருங்கிணைத்துள்ள அகமதாபாத் மலா்க் கண்காட்சி, நகரின் துடிப்பான உணா்வு மற்றும் இயற்கை மீதான அன்பை அழகுற பறைசாற்றுகிறது. படைப்பாற்றல் மற்றும் பிரம்மாண்டத்தில் இந்த மலா்க் கண்காட்சி ஆண்டுதோறும் ஏற்றம் பெறுவது பாராட்டுக்குரியது’ என்று தெரிவித்துள்ளாா்.
மலா்க் கண்காட்சியில் வண்ணமயமான எழில்மிகு வடிவமைப்புகளின் புகைப்படங்களையும் அவா் பகிா்ந்துள்ளாா்.

