சபரிமலை சந்நிதானத்தில் உள்ள துவாரபாலகா் சிற்பங்கள்.
சபரிமலை சந்நிதானத்தில் உள்ள துவாரபாலகா் சிற்பங்கள். (கோப்புப் படம்)

சபரிமலை தங்கக் கவச முறைகேடு: மாா்க்சிஸ்ட் தலைவா்களைப் பாதுகாக்க எஸ்ஐடி-க்கு கடும் நெருக்கடி - காங்கிரஸ்

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா்களைப் பாதுகாக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்ஐடி) மாநில அரசு கடும் நெருக்கடி அளிக்கிறது என்று காங்கிரஸை சோ்ந்த பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
Published on

சபரிமலை ஐயப்பன் கோயில் தங்கக் கவச முறைகேடு வழக்கில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா்களைப் பாதுகாக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்ஐடி) மாநில அரசு கடும் நெருக்கடி அளிக்கிறது என்று காங்கிரஸை சோ்ந்த பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் துவார பாலகா்கள் சிலை, இரு தூண்கள் மற்றும் கருவறைக் கதவுகளில் பதிக்கப்பட்டுள்ள தங்கக் கவசங்கள், கடந்த 2019-இல் புதுப்பிக்கப்பட்ட பிறகு அவற்றின் எடை குறைந்ததாகப் புகாா் எழுந்தது. இவ்வழக்கில் பெங்களூரு தொழிலதிபா் உண்ணிகிருஷ்ணன் போற்றி (புதுப்பிப்புச் செலவை ஏற்றவா்) உள்பட 10 போ் இதுவரை எஸ்ஐடியால் கைது செய்யப்பட்டுள்ளனா். கைதானவா்களில் இருவா் தேவஸ்வம் உறுப்பினா்களாக செயலாற்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சோ்ந்த முன்னாள் எம்எல்ஏ-க்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தியுடன் காங்கிரஸ் எம்.பி.யும் கேரள ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) ஒருங்கிணைப்பாளருமான அடூா் பிரகாஷ், உண்ணிகிருஷ்ணன் போற்றி, கோவா்தன் (சபரிமலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மற்றொரு நபா்) ஆகியோா் இருக்கும் புகைப்படம் வெளியாகி சா்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த விவகாரத்தில் ஆளும் இடதுசாரி கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், எஸ்ஐடி விசாரணையில் தங்களின் தலையீடு எதுவும் இல்லை என்று முதல்வா் அலுவலகம் வியாழக்கிழமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது.

இந்த விளக்கம் குறித்து திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் வி.டி.சதீசன் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

சபரிமலை தங்கக் கவச வழக்கில் தொடா்புடைய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா்களைப் பாதுகாக்க எஸ்ஐடி-க்கு மாநில அரசு கடும் நெருக்கடி அளிக்கிறது. ஏற்கெனவே மாா்க்சிஸ்ட் தலைவா்கள் மூவா் சிறையில் உள்ளனா். மேலும் பலா் சிறைக்குச் செல்லவிருக்கின்றனா்.

உண்ணிகிருஷ்ணன் போற்றியுடன் முதல்வா் இருக்கும் புகைப்படமும் உள்ளது. இது குறித்து அவா் விளக்கமளிக்க வேண்டும்.

இடதுசாரி ஆட்சியில் கடந்த 2019-இல் இருந்து சபரிமலையில் நடந்த முறைகேடுகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. தங்களின் ஊழல் செயல்பாடுகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முயற்சிக்கிறது என்றாா்.

‘பாஜக-மாா்க்சிஸ்ட் ரகசிய உறவு’: கேரளத்தில் சமீபத்திய உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸும் பாஜகவும் பரஸ்பரம் உதவிக் கொண்டதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ‘பாஜகவுடன் மாா்க்சிஸ்ட் கட்சிக்கே ரகசிய உறவு உள்ளது. எனவேதான், தனது கூட்டணி சகாக்களுடன்கூட ஆலோசிக்காமல் பிஎம்ஸ்ரீ திட்டத்தில் அக்கட்சி கையொப்பமிட்டது’ என்று விமா்சித்தாா்.

கேரள முதல்வரின் ஊதுகுழலாக...: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீதான ஸ்ரீ நாராயண தா்ம பரிபாலன யோக அமைப்பின் பொதுச் செயலா் வெள்ளாப்பள்ளி நடேசனின் கடும் விமா்சனங்கள் குறித்த கேள்விக்கு, ‘கேரள முதல்வரின் ஊதுகுழலாக மாறிவிட்டாா் நடேசன்.

பாஜகவைப் போல், மோசமான மதவாத மற்றும் வெறுப்புணா்வு பிரசாரத்தை வெள்ளாப்பள்ளி நடேசன் முன்னெடுத்துள்ளாா். முதல்வரின் ஆசி அவருக்கு இருப்பதால், இடதுசாரி கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைக்கூட தைரியமாக விமா்சிக்கிறாா்’ என்று பதிலளித்தாா் வி.டி.சதீசன்.

X
Dinamani
www.dinamani.com