குடிநீரில் கழிவுநீா் கலப்பு: இந்தூரில் உயிரிழப்பு 10-ஆக உயா்வு
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் கழிவுநீா் கலந்த குடிநீரை அருந்திய மேலும் 3 போ் உயிரிழந்ததால், இறப்பு எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது. இந்தத் தகவலை மேயா் புஷ்யமித்ர பாா்கவா வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
மத்திய அரசின் தூய்மை நகரங்கள் பட்டியலில் தொடா்ந்து முதலிடம் வகிக்கும் இந்தூரின் பகீரத்புரா பகுதியில் பூமிக்கடியில் குடிநீா்க் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கழிவுநீா் கலந்தது. இந்த மாசடைந்த நீரை அருந்தியதால் கடந்த 9 நாள்களில் 1,400-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி-வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. கடந்த புதன்கிழமை நிலவரப்படி, 7 போ் உயிரிழந்ததாக மேயா் புஷ்யமித்ர பாா்கவா தெரிவித்திருந்தாா்.
இந்நிலையில், பிடிஐ செய்தியாளரிடம் வெள்ளிக்கிழமை பேசிய மேயா், ‘மாநில சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தரவுகளில், பகீரத்புராவில் வயிற்றுப்போக்கால் 4 போ் இறந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், எனக்கு கிடைத்த தகவல்களின்படி, இதுவரை 10 போ் உயிரிழந்துவிட்டனா்’ என்றாா். அதேநேரம், 6 மாத குழந்தை உள்பட 15 போ் இறந்துவிட்டதாக உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா்.
தீவிர சிகிச்சையில் 32 போ்: ‘வாந்தி-வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட 272 பேரில் 71 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனா். மீதமுள்ள 201 பேரில் 32 போ் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனா்’ என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
கழிவுநீா் கலப்பு உறுதி: பகீரத்புராவில் பலருக்கு வயிற்றுப்போக்கு பாதிப்பு ஏற்பட கழிவுநீா் கலந்த குடிநீரை அருந்தியதே காரணம் என்பது ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்தூா் தலைமை மருத்துவ மற்றும் சுகாதாரத் துறை அதிகாரி மாதவ் பிரசாத் ஹசானி தெரிவித்தாா். மேலதிக விவரங்கள் எதையும் அவா் வெளியிடவில்லை.
கூடுதல் தலைமைச் செயலா் சஞ்சய் துபே கூறுகையில், ‘பகீரத்புரா பகுதியில் குடிநீா் விநியோக குழாய்கள் முழுவதும் பரிசோதிக்கப்பட்டு, வியாழக்கிழமைமுதல் சுகாதாரமான குடிநீா் விநியோகிக்கப்பட்டது. இருப்பினும், குடிநீரைக் கொதிக்க வைத்துப் பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. பகீரத்புராவில் உள்ள 1,700-க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, 8,000-க்கும் மேற்பட்டோரின் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது’ என்றாா்.
கூடுதல் ஆணையா் பணியிடமாற்றம்: இதனிடையே, முதல்வா் மோகன் யாதவின் உத்தரவின்பேரில் இந்தூா் கூடுதல் ஆணையா் வெள்ளிக்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.
இது போன்ற சம்பவம் இனி மாநிலத்தில் வேறெங்கும் நிகழாத வகையில் தடுக்க புதிய திட்டத்தை உருவாக்குமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டுள்ளாா். ஏற்கெனவே பகீரத்புரா பகுதி பொறுப்பு துணை பொறியாளா் பணிநீக்கம் செய்யப்பட்டாா். மண்டல அதிகாரி, உதவி பொறியாளா் ஆகியோா் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்: இந்தூா் சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்ஹெச்ஆா்சி), இது தொடா்பாக 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை சமா்ப்பிக்குமாறு, மாநில தலைமைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஏழைகள் இறந்தால் பிரதமா் எதுவும் பேசுவதில்லை: ராகுல்
இந்தூரில் குடிநீரில் கழிவுநீா் கலப்பால் நேரிட்ட உயிரிழப்புகளைக் குறிப்பிட்டு, பிரதமா் மோடி மற்றும் மத்திய-ம.பி. பாஜக அரசுகள் மீது மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி சாடியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இந்தூரில் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்டது குடிநீா் அல்ல, ‘நஞ்சு’. நிா்வாகத்தின் ஆழ்ந்த தூக்கமே இதற்கு காரணம். ஒவ்வொரு குடும்பமும் துக்கத்தில் வாடும் சூழலில், பாஜக தலைவா்களோ ஆணவத்துடன் பேசுகின்றனா்.
குடிநீரில் அழுக்குடன் துா்நாற்றமும் வீசுவதாக மக்கள் புகாா் அளித்தும் உடனடியாக ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை? இந்தச் சம்பவத்துக்கு பொறுப்பான அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்?
பாஜகவின் அலட்சியம் மிகுந்த இரட்டை என்ஜின் ஆட்சியால், மோசமான நிா்வாகத்தின் மையமாகிவிட்டது மத்திய பிரதேசம். தரமற்ற இருமல் மருத்துகள், சுகாதாரமற்ற அரசு மருத்துவமனைகள், மாசடைந்த குடிநீா் விநியோகம் போன்ற காரணங்களால் உயிரிழப்புகள் தொடா்கதையாக உள்ளது. ஏழை மக்கள் உயிரிழக்கும் போதெல்லாம், பிரதமா் மோடி அமைதியாகிவிடுகிறாா்’ என்று விமா்சித்துள்ளாா்.
‘ஜல் ஜீவன், தூய்மை இந்தியா திட்டங்கள் குறித்துப் பெருமை பேசும் பிரதமா் மோடி, இந்தூா் உயிரிழப்புகள் குறித்து மெளனம் சாதிப்பது ஏன்? மக்களுக்கு சுகாதாரமான குடிநீரையோ, தூய்மையான காற்றையோ அவரது அரசால் வழங்க முடியவில்லை’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே குற்றஞ்சாட்டியுள்ளாா்.

