அஸ்வினி வைஷ்ணவ்
அஸ்வினி வைஷ்ணவ்

சமூக ஊடகங்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியம்: அஸ்வினி வைஷ்ணவ்

தங்கள் தளங்களில் வெளியிடப்படும் பதிவுகளை கண்காணித்து சமூக ஊடகங்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியம் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
Published on

தங்கள் தளங்களில் வெளியிடப்படும் பதிவுகளை கண்காணித்து சமூக ஊடகங்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியம் என மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக குழந்தைகளை அநாகரிகமாக சித்தரிக்கும் ஆபாச பதிவுகள் மற்றும் ஆபாச காட்சிகள் உள்பட மோசமான, சட்டவிரோத பதிவுகளை உடனடியாக நீக்காவிட்டால் தகவல் தொழில்நுட்பச் (ஐடி) சட்டம், ஐடி விதிகள், 2021, பாரதிய நியாய சம்ஹிதா மற்றும் பிற குற்றவியல் சட்டங்களின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அண்மையில் மத்திய அரசு எச்சரித்த நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

பெண்களை அநாகரிகமாக சித்தரித்து ‘க்ரோக்’ செயற்கை நுண்ணறிவு செயலியில் அதிகப்படியான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாவதை தடுக்க வலியுறுத்தி மாநிலங்களவை உறுப்பினா் பிரியங்கா சதுா்வேதி அஸ்வினி வைஷ்ணவுக்கு கடிதம் எழுதினாா்.

இதுதொடா்பான மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:

தங்கள் தளங்களில் வெளியாகும் பதிவுகளை கண்காணிப்பது சமூக ஊடகங்களின் கடமை. எனவே சமூக ஊடகங்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியம்.

போலியான செய்திகள், ஆபாச பதிவுகளை தடுப்பதற்கு சமூக ஊடகங்களை ஒழுங்கப்படுத்த கடுமையான சட்டத்தை கொண்டுவர நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரைத்துள்ளது. இதை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்றாா்.

இந்நிலையில், மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிவிக்கையில், ஏற்கெனவே நடைமுறையில் உள்ள சட்டங்களைப் பின்பற்றி நடக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளதே தவிர புதிய உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என சமூக ஊடக நிபுணா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com