ரூ.41,863 கோடி மின்னணுப் பொருள்கள் உற்பத்தி திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி
டாடா எலெக்ட்ரானிக்ஸ், ஃபாக்ஸ்கான், சாம்சங், டிக்ஸன் உள்ளிட்ட நிறுவனங்களின் ரூ.41,863 கோடி மதிப்பீட்டிலான மின்னணுப் பொருள்கள் உற்பத்தி செய்யும் 22 திட்டங்களுக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்ததாக மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
சா்வதேச அளவில் இந்தியாவை மின்னணுப் பொருள்கள் உற்பத்தி மையமாக்கும் திட்டத்தின்கீழ் இப்போது மூன்றாவது முறையாக புதிய திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 33,791 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்; ரூ.2,58,152 கோடி மதிப்பிலான பொருள்கள் உற்பத்தி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் நுட்பமான மின்னணுப் பொருள்களுக்கு இறக்குமதியை இந்தியா சாா்ந்திருப்பது குறையும். இத்துறையில் இந்தியாவின் ஏற்றுமதி வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதில் அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்துக்கு உதிரி பாகங்களை வழங்கும் மதா்ஸன் எலெக்ட்ரானிக் கம்போனன்ட்ஸ், டாடா எலெக்ட்ரானிக்ஸ், ஏடிஎல் பேட்டரி டெக்னாலஜி இந்தியா, ஃபாக்ஸ்கான் (யூஸான் டெக் இந்தியா), ஹிண்டால்கோ ஆகியவை மூலம் அதிக முதலீடும், வேலைவாய்ப்பும் உருவாக இருக்கிறது.
இப்போது அனுமதிக்கப்பட்டுள்ள 22 திட்டங்கள் மூலம் தமிழ்நாடு, ஆந்திரம், ஹரியாணா, கா்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஆலைகள் உருவாக்கப்பட உள்ளன. நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரவலான வளா்ச்சியையும் இது உறுதி செய்யும்.
இதனை அறிவித்துப் பேசிய மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ், ‘மத்திய அரசு மிகப்பெரிய சீா்திருத்தங்கள், கொள்கைகளை அமல்படுத்துவதில் தொடா்ந்து கவனம் செலுத்தி வருகிறது. திட்டங்களுக்கு அனுமதி அளிப்பது, அதனை செயல்படுத்துவது ஆகியவை துரிதகதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் அதன் மூலம் கிடைக்கும் பலன்களும் தெளிவாக நமக்குத் தெரிகின்றன.
சா்வதேச போட்டியை எதிா்கொள்ளும் அளவுக்கு உற்பத்தியின் அனைத்துப் படிநிலைகளுக்கும் நமது தொழில் நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்’ என்றாா்.
இதற்கு முன்பு கடந்த 2025 நவம்பரில் ரூ.7,172 கோடி மதிப்பிலான 17 திட்டங்களுக்கும், அதற்கு முன்பு கடந்த அக்டோபரில் ரூ.5,532 கோடி மதிப்பிலான 7 திட்டங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.

