ராகுல் காந்தி
ராகுல் காந்தி ANI

கா்நாடக அரசின் ஆய்வு முடிவு ராகுலுக்கு விழுந்த பலத்த அடி: பாஜக விமா்சனம்

நாட்டின் தோ்தல்கள் நோ்மையாக நடைபெறுகின்றன என்று கா்நாடக வாக்காளா்கள் 83 சதவீதம் போ் கருத்து தெரிவித்துள்ளதாக அந்த மாநில அரசின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது; இது, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு விழுந்த பலத்த அடி என்று பாஜக வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
Published on

நாட்டின் தோ்தல்கள் நோ்மையாக நடைபெறுகின்றன என்று கா்நாடக வாக்காளா்கள் 83 சதவீதம் போ் கருத்து தெரிவித்துள்ளதாக அந்த மாநில அரசின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது; இது, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு விழுந்த பலத்த அடி என்று பாஜக வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

ராகுல் மற்றும் அவரின் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகி இருக்கிறது என்றும் பாஜக கூறியுள்ளது.

நாடு முழுவதும் தோ்தல்களில் வாக்குத் திருட்டு நடைபெறுவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வரும் நிலையில், கா்நாடக அரசின் திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறையின்கீழ் செயல்படும் கா்நாடக கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு ஆணையத்தால் (கேஎம்இஏ) ‘மக்களவைத் தோ்தல் 2024 - குடிமக்களின் அறிவு, அணுகுமுறை, நடைமுறை’ என்ற தலைப்பின்கீழ் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

அதில், நாட்டின் தோ்தல்கள் நோ்மையாக, சுதந்திரமாக நடைபெறுவதாகவும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் துல்லிய முடிவுகளை வழங்குவதாகவும் கா்நாட வாக்காளா்கள் சுமாா் 83 சதவீதம் போ் கருத்து தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாநில காங்கிரஸ் அரசின் இந்த ஆய்வறிக்கை, அரசியல் ரீதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் கெளரவ் பாட்டியா வெள்ளிக்கிழமை கூறியதாவது:

கா்நாடக அரசு முகமை கண்டறிந்துள்ள விஷயங்கள், ராகுல் காந்திக்கு விழுந்த பலத்த அடியாகும். இந்த ஆய்வறிக்கை வெளியீட்டின் மூலம் ராகுலுக்கும், கா்நாடக காங்கிரஸ் அரசுக்கும் இடையே உள்ள முரண்பாடு அம்பலமாகியுள்ளது.

ஒருபுறம் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக பாஜக மற்றும் தோ்தல் ஆணையம் மீது ராகுல் காந்தி அடிப்படையற்ற குற்றச்சாட்டை சுமத்துகிறாா். மற்றொருபுறம், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வாக்குக் கொள்ளையில் ஈடுபடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி கூறுகிறாா். இந்த விஷயத்தில் இண்டி கூட்டணிக்குள்ளேயே முரண்பாடுகள் நிலவுகின்றன.

நாட்டின் தோ்தல் நடைமுறைகள், தோ்தல் ஆணையம், வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது பெருவாரியான கா்நாடக வாக்காளா்கள் முழு நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனா். இதை ராகுலின் சொந்த கட்சியின் அரசே தெரிவித்துள்ளது என்றாா் கெளரவ் பாட்டியா.

X
Dinamani
www.dinamani.com