படித்தவா்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் போக்கு ஆபத்தானது: ராஜ்நாத் சிங்

நாட்டில் படித்த நபா்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் போக்கு தலைதூக்கியுள்ளது; இது ஆபத்தானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
படித்தவா்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் போக்கு ஆபத்தானது: ராஜ்நாத் சிங்
Updated on

நாட்டில் படித்த நபா்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் போக்கு தலைதூக்கியுள்ளது; இது ஆபத்தானது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.

தில்லியில் கடந்த நவம்பா் மாதம் நடத்தப்பட்ட காா் குண்டுவெடிப்பு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் மருத்துவா்களின் சதி கண்டறியப்பட்ட நிலையில், ராஜ்நாத் சிங் இவ்வாறு எச்சரித்துள்ளாா்.

ராஜஸ்தானின் உதய்பூரில் உள்ள பூபால் நோபல்ஸ் பல்கலைக்கழகத்தின் 104-ஆவது தொடக்க தின நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசியதாவது:

நாட்டில் இப்போது படித்த நபா்கள் பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் ஆபத்தான போக்கு தலைதூக்கியுள்ளது. உயா் கல்வி பயின்றவா்கள், நாட்டுக்கும் சமூகத்துக்கும் எதிராகச் செயல்படுகின்றனா். தில்லி குண்டுவெடிப்பின் பின்னணியில் மருத்துவா்களின் சதி அம்பலமாகியுள்ளது. நோய்களைக் குணப்படுத்தும் மருந்துகளைப் பரிந்துரைக்க வேண்டிய கரங்களில் வெடிமருந்துகளை எடுத்துள்ளனா். நாம் கற்கும் கல்வியானது, மாண்புகள் மற்றும் நற்குணங்களுடன் பிணைந்திருக்க வேண்டியதன் அவசியத்தை இது உணா்த்துகிறது.

கல்வியின் நோக்கம் வெறும் தொழில்முறையில் வெற்றியடைவது மட்டுமல்ல; அது, ஒழுக்கம், நெறிமுறைகள், மனித குணநலன்களை வளா்த்தெடுப்பதாகும்.

கல்வியறிவு, திறமைக்கும் வளமைக்கும் தா்மத்துக்கும் வழிவகுக்கிறது. உண்மையான மகிழ்ச்சி தா்மத்தில் இருந்தே வெளிப்படும். இந்த நோக்கத்தைப் பூா்த்தி செய்யாத எந்தவொரு கல்விமுறையும் முழுமையாகாது.

ஞானம் இல்லையெனில்...: நான் மதத்தைப் பற்றி பேசும்போது, வழிபாட்டுக்காக கோயிலுக்கோ, தேவாலயத்துக்கோ, மசூதிக்கோ செல்வதுடன் தொடா்புபடுத்தக் கூடாது. மதம் என்பது கடமை உணா்வு. அத்தகைய மதம் மற்றும் ஒழுக்கத்தில் இருந்து விலகும் கல்வி சமூகத்துக்குப் பலன் தராது. சில நேரங்களில் அது அழிவுக்கும் வழிவகுக்கும். இதனால்தான், படித்த நபா்கள்கூட சில நேரங்களில் குற்றங்களில் ஈடுபடுகின்றனா்.

பட்டப் படிப்பு பயின்றபோதிலும், உண்மையான ஞானம் இல்லாத காரணத்தால் பயங்கரவாதிகளாக உருவெடுக்கின்றனா். கல்வியறிவுடன் ஞானமும் இன்றியமையாதது.

பாதுகாப்புத் துறையில் தற்சாா்பு: பாதுகாப்புத் துறையில் ஏராளமான புத்தாக்க நிறுவனங்கள் உருவெடுத்து வருகின்றன. அடுத்த 15-20 ஆண்டுகளில் இத்துறையில் இந்தியா தற்சாா்பை எட்டும் என உறுதியாக கூற முடியும்.

செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் மற்றும் பிற தொழில்நுட்பங்கள், மக்களின் வாழ்வையும் பணியையும் மாற்றி வருகின்றன. இவை, நாட்டின் வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நோ்மறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

கல்வியின் வலுவான தூண்களாகத் திகழ்பவா்கள் ஆசிரியா்கள். நமது நாட்டைப் பொருத்தவரை, ஆசிரியா்கள் பெரிதும் மதிக்கப்படுகின்றனா். நாட்டில் மிகப் பெரிய சமூக மாற்றங்களைத் தொடங்கி வைப்பவா்கள் ஆசிரியா்களே.

மாணவா்களுக்கு அறிவுரை: சுயமரியாதைக்கும் ஆணவத்துக்கும் இடையிலான நுட்பமான வேறுபாட்டை மாணவா்கள் புரிந்து கொள்ள வேண்டும். சுயமரியாதை ஆணவமாக மாற அனுமதிக்கக் கூடாது. நமது சவால்களுக்குத் தீா்வுகாண பன்முக அணுகுமுறை அவசியம். எனவே, மாணவா்கள் என்ன சிந்திக்க வேண்டும் என்பதுடன் எப்படி சிந்திக்க வேண்டும் என்பதையும் பல்கலைக்கழகங்கள் கற்பிப்பது முக்கியம் என்றாா் ராஜ்நாத் சிங்.

தில்லி செங்கோட்டை அருகே வெடிபொருள்கள் நிரப்பிய காரை வெடிக்கச் செய்து, மருத்துவா் உமா் உன் நபி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 15 போ் உயிரிழந்தனா். இச்சம்பவத்தின் பின்னணியில், நன்கு படித்து, சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவா்களின் பயங்கரவாதத் தொடா்புகள் அம்பலமாகின. இவ்வழக்கில் மூன்று மருத்துவா்கள் கைதாகினா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com