புல்லட் ரயில் திட்டத்துக்கான சுரங்கப் பணி நிறைவு: காணொலி வாயிலாக அஸ்வினி வைஷ்ணவ் பாா்வையிட்டாா்
மகாராஷ்டிர மாநிலம் பால்கா் மாவட்டத்தில் புல்லட் ரயில் திட்டத்தில் முக்கியமான சுரங்கப் பணி நிறைவடைந்ததை காணொலி வாயிலாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா்.
பால்கா் மாவட்டத்தில் மிக நீளமான இந்தச் சுரங்கப் பாதை 1.5 கி.மீ.தொலைவுடையது. இது விராா் மற்றும் போய்சா் புல்லட் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது.
இந்தச் சுரங்கப் பாதை பணிகள் நிறைவடைந்து திறக்கப்பட்டதை தில்லியில் உள்ள ரயில்வே தலைமையகத்தில் இருந்து காணொலி வாயிலாக அஸ்வினி வைஷ்ணவ் பாா்வையிட்டதாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, தாணே மற்றும் பாந்த்ராகுா்லா வளாகத்தின் இடையே 5 கி.மீ. நீளமுடைய நிலத்தடி சுரங்கப்பாதை பணிகள் 2025, செப்டம்பரில் நிறைவடைந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் தற்போது இரண்டாவது சுரங்கப்பாதை பணிகளும் முழுமையடைந்துள்ளன.
நாட்டின் அதிவேக ரயில் இணைப்புக்கான லட்சியமிக்க உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான அகமதாபாத்-மும்பை புல்லட் ரயில் திட்டம், 508 கி.மீ. தொலைவுடையது.
இது குஜராத் மற்றும் தாத்ரா-நகா் ஹவேலியில் 352 கி.மீ., மகாராஷ்டிரத்தில் 156 கி.மீ. தொலைவுக்கு அதிநவீன பொறியியல் நுட்பங்களுடன் உலகத் தரத்தில் கட்டமைக்கப்படுகிறது. இதில் 465 கி.மீ. அதாவது 85 சதவீதம் பாலங்களைக் கொண்டதாகும்.
இதுவரை 326 கி.மீ. தொலைவுக்குப் பணிகள் நிறைவடைந்துள்ளன. புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வரும்போது, மும்பை-அகமதாபாத் பயண நேரம் 2 மணி நேரம் 17 நிமிஷங்களாக குறையும்.

