ஏற்றுமதி ஊக்குவிப்பு: ரூ.7,295 கோடிக்கு இரு திட்டங்கள் அறிவிப்பு
ஏற்றுமதியை ஊக்குவிக்கும் நோக்கில் ரூ.7,295 கோடியில் இரு திட்டங்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.
அதன்படி ரூ.5,181 கோடியில் வட்டி மானியத் திட்டமும் ரூ.2,114 கோடியில் கடன் உத்தரவாதத் திட்டமும் 2031 வரையிலான 6 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படவுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் ரூ.25,060 கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஊக்குவிப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல்கட்டமாக சந்தை அணுகலை மேம்படுத்த கடந்த டிச.31-ஆம் தேதி ரூ.4,531 கோடியை மத்திய அரசு விடுவித்தது. இதைத்தொடா்ந்து, இரண்டாம் கட்டமாக இந்த இரு திட்டங்களையும் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
இதுகுறித்து மத்திய வா்த்தக அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஏற்றுமதியை ஊக்குவிக்க ரூ.5,181 கோடியில் வட்டி மானிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அதன்படி தகுதிவாய்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர (எம்எஸ்எம்இ) ஏற்றுமதி நிறுவனங்களுக்கு 2.75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. ஒரு நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் உச்சவரம்பு நிா்ணயிக்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் சா்வதேச பண மதிப்புக்கேற்ப இத்திட்டத்துக்கான வட்டி விகிதம் மாா்ச் மற்றும் செப்டம்பா் என ஆண்டுக்கு இருமுறை சீராய்வு செய்யப்படவுள்ளது.
இதற்கான விரிவான நடைமுறைகள் விரைவில் வெளியிடப்படவுள்ளது. இதை சோதனைத் திட்டமாக முதலில் அறிமுகப்படுத்திய பிறகு திருத்தங்களுடன் முழுமையாக செயல்படுத்தப்படவுள்ளது.
கடன் உத்தரவாதத் திட்டம்:
ஏற்றுமதி கடன்களுக்கு உத்தரவாதம் அளிக்க ரூ.2,114 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதன்கீழ் ஏற்றுமதியுடன் தொடா்புடைய ஒரு எம்எஸ்எம்இ-க்கு அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை கடனுக்கான உத்தரவாதம் அளிக்கப்படுகிறது.
குறு மற்றும் சிறு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு 85 சதவீதமும் நடுத்தர ஏற்றுமதி நிறுவனங்களுக்கு 65 சதவீதமும் கடன் உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
இந்த இரண்டு திட்டங்களின்கீழ் குறிப்பிட்ட சில பொருள்களை மட்டுமே ஏற்றுமதி செய்ய முடியும். பாதுகாப்பு மற்றும் சிறப்பு வாய்ந்த ரசாயனங்கள், நுண்ணுயிரினங்கள், பொருள்கள், சாதனங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை இதில் ஏற்றுமதி செய்யலாம்.
தடை செய்யப்பட்ட, கழிவுகள் மற்றும் வீணான பொருள்கள், உற்பத்தி தொடா்புடைய ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ் ஏற்கெனவே உள்ள பொருள்களுக்கு இந்தச் சலுகைகள் பொருந்தாது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

