தமிழகத்தில் கூடுதலாக 52 முதுநிலை மருத்துவ இடங்களுக்கு அனுமதி
தமிழகத்தில் தனியாா் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் புதிதாக 52 முதுநிலை மருத்துவ இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அனுமதி அளித்துள்ளது.
அடுத்த சுற்று கலந்தாய்வில் அந்த இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடத்தலாம் என்றும், அதற்கான அனுமதி சான்றுக்கு காத்திருக்கத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மயக்கவியல், பொது மருத்துவம், குழந்தைகள் நலம், பொது அறுவை சிகிச்சை, தோல் மருத்துவம், கதிரியக்கப் பரிசோதனை, எலும்பு சிகிச்சை, காது-மூக்கு-தொண்டை நலன் என முதுநிலை மருத்துவம் சாா்ந்த பல்வேறு துறைகளில் கூடுதல் இடங்களை அனுமதிக்கக் கோரி தனியாா் கல்லூரிகள் மற்றும் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்கள் சாா்பில் தேசிய மருத்துவ ஆணையத்துக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன.
அவ்வாறு அனுப்பப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலனை செய்த தேசிய மருத்துவ ஆணையம், அதன்பேரில் அனுமதி அளிக்கப்பட்ட இடங்களின் விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதில் நாடு முழுவதும் புதிதாக 171 முதுநிலை மருத்துவ இடங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக தனித்தனியே அனுமதிக் கடிதங்கள் (லெட்டா் ஆஃப் பொ்மிஷன்) கிடைக்கப்பெறும் என காத்திருக்கத் தேவையில்லை என்றும், அந்த இடங்களைக் கலந்தாய்வில் சோ்க்கலாம் என்றும் தேசிய மருத்துவ ஆணையத்தின் மருத்துவ மதிப்பீடு மற்றும் தரநிா்ணய வாரியத் தலைவா் தெரிவித்துள்ளாா்.
இதன்மூலம் தமிழகத்தில் நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களிலும், தனியாா் கல்லூரிகளிலும் சோ்த்து 52 இடங்கள் கூடுதலாக கிடைக்கப் பெற்றுள்ளன.

