

பிரயாக்ராஜில் மகா மேளா இன்று கோலாகலமாகத் தொடங்கியதையடுத்து லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
ஆண்டுக்கொருமுறை நிகழும் மகா மேளா பிரயாக்ராஜில் இன்று தொடங்கியது. பௌஷ் பௌர்ணமி (பௌஷ் பூர்ணிமா) ஒரு மாதக் கால கல்பவாசம் இன்று முதல் தொடங்கியது. பிரயாக்ராஜில் இன்று புனித நீராடுவதால் மக்களின் பாவங்கள் நீங்குவதாக நம்பப்படுகிறது.
மகா மேளா நடைபெறும் இடத்தில் 10,000 சதுர அடி பரப்பளவில் பத்து நீராடும் படித்துறைகள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் ஒன்பது மிதவைப் பாலங்களும் கட்டப்பட்டுள்ளன. கல்பவாசிகளும், பக்தர்களும் புனித நீராடுவதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கல்பவாசத்தின்போது பக்தர்கள் தினமும் இரண்டு முறை கங்கை நதியில் புனித நீராடுவார்கள். ஒருவேளை மட்டும் உணவு உண்டு, மீதி நேரத்தைத் தியானம் செய்வதிலும், தங்களின் இஷ்ட தெய்வத்தை வழிபடுவதிலும் செலவிடுவார்கள்.
இதுதொடர்பாக திரிவேணி சங்கம ஆரத்தி சேவா சமிதியின் தலைவர் ஆச்சார்யா ராஜேந்தி மிஸ்ரா கூறுகையில்,
மகா மேளா தொடங்கியுள்ள நிலையில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கல்பவாசத்தை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் காலை 10 மணி வரை சுமார் 9 லட்சம் பக்தர்கள் பிரயாக்ராஜில் புனித நீராடியுள்ளனர். இன்று நாள் முழுவதும் புனித நீராடல் தொடரும் என்று அவர் கூறினார்.
பிரயாக் தாம் சங்கத்தின் தலைவர் ராஜேந்திர பாலிவால் கூறுகையில், கல்பவாசிகள் உள்பட சுமார் 20 லட்சம் பக்தர்கள் இன்று மாலைக்குள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
பௌஷ் பௌர்ணமியான இன்று புனித நீராடுவதற்கு மாலை 4 மணி வரை உகந்த நேரமாகக் கருதப்படுகிறது. கல்பவாசிகள், நீராடிய பிறகு, கல்பவாசத்திற்கான சபதத்தை எடுத்துக்கொண்டு, மேளா நடைபெறும் இடத்தில் தங்குவார்கள்.
பிரயாக்ராஜ் கோட்ட ஆணையர் சௌமியா அகர்வாலின் கூற்றுப்படி, பௌஷ் பௌர்ணமியான இன்று கங்கை மற்றும் திரிவேணி சங்கமத்தில் 20-30 லட்சம் பக்தர்கள் நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
புனித நீராடலின் முதல் நாள் என்பதால் கூட்டம் சற்று குறைவாக இருந்ததாகவும், மக்கள் வசதியாக நீராட முடிந்ததாகவும் மகா மேளாவில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
மகா மேளா துணை மாவட்ட ஆட்சியர் தயானந்த் பிரசாத் கூறுகையில், முதல் முறையாக, மகா மேளா பகுதியில் கல்பவாசிகளுக்காக தனி நகரம் அமைக்கப்பட்டுள்ளது. 950 பரப்பளவில் பரவியுள்ள இந்த நகரத்திற்கு பிரயாக்வால் என்று பெயரிடப்பட்டுள்ளது. இது நாகவாசுகி கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது.
மகா மேளாவில் பௌஷ் பூர்ணிமாவை தவிர, மகர சங்கராந்தி (ஜனவரி 14), மௌனி அமாவாசை (ஜனவரி 18) வசந்த பஞ்சமி (ஜனவரி 230, மாகி பூர்ணிமா (பிப்ரவரி 1) மற்றும் மகா சிவராத்திரி (பிப். 15) ஆகியவை முக்கிய நீராடல் தினங்களாகக் கருதப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.