

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சீனா முக்கிய பங்கு வகித்ததாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல்களைக் கைவிடுவதற்கு மத்தியஸ்தம் செய்ததாக, கடந்த டிச.31 அன்று சீன வெளியுறவுத் துறை அறிவித்தது.
சீனாவின் இந்த அறிவிப்பு இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில் இந்த விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி மௌனம் கலைக்க வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இந்த நிலையில், கடந்த 2025 ஆம் ஆண்டின் மே 6 முதல் 10 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த மோதல்களில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசுகளுடன் சீனா தொடர்ந்து தொடர்பில் இருந்ததாக, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் தாஹிர் அந்த்ராபி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் பேசியதாவது:
“ சீன அரசு, மே 6 முதல் 10 வரையிலான அந்த மூன்று நான்கு நாள்களில் அல்லது அதற்கு முன்பும் பின்பும் கூட இந்தியாவின் தலைமையுடன் சில தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தது.
அவை அனைத்தும் மிகவும் நேர்மறையாக வகைப்படுத்தப்பட்ட தொடர்புகள், பதற்றங்களைக் குறைப்பதற்கும் அமைதி மற்றும் பாதுகாப்பைக் கொண்டு வருவதற்கும் அவர்கள் மேற்கொண்ட பங்களிப்பு என்று நான் நினைக்கின்றேன்.
எனவே, மத்தியஸ்தம் குறித்து சீன அரசின் விளக்கம் சரியாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று இந்த விவகாரம் குறித்து கேட்கப்பட்ட செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் பதிலளித்து பேசியுள்ளார்.
முன்னதாக, பாகிஸ்தானுடனான மோதல்களைக் கைவிட்டதில் மூன்றாவது நபரின் தலையீடு இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், அணுசக்தி பலம் கொண்ட இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதலை நிறுத்தியதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பல நிகழ்வுகளில் பேசி வந்தார்.
இந்தச் சூழலில், இந்தியா - பாகிஸ்தான் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மத்தியஸ்தம் செய்ததாக சீன அரசும் உரிமைக் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.