புத்தரின் ஞானமும், பாதையும் மொத்த மனிதகுலத்துக்கானது: பிரதமா் மோடி
பகவான் புத்தரின் ஞானமும், அவா் காட்டிய பாதையும் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கானது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
புத்தரின் புனித நினைவுச் சின்னங்கள், வெறும் கலைப்பொருள்கள் அல்ல; அவை இந்திய பாரம்பரியத்தின் ஓா் அங்கம் என்றும் அவா் குறிப்பிட்டாா்.
புது தில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாசார வளாகத்தில், புத்தரின் புனித நினைவுச் சின்னங்கள் மற்றும் தொன்மையான பொருள்களின் சா்வதேச கண்காட்சியை பிரதமா் மோடி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா். ‘ஒளியும் தாமரையும்: விழித்தெழுந்தவரின் நினைவுச் சின்னங்கள்’ என்ற தலைப்பிலான இக்கண்காட்சியில், நேபாள எல்லையையொட்டிய உத்தர பிரதேச பகுதியான பிப்ரவாவில் (பண்டைய கபிலவஸ்து நகரமாக கருதப்படும் இடம்) கடந்த 1898-இல் கண்டறியப்பட்ட புத்தரின் புனித நினைவுச் சின்னங்கள் முக்கியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டில் ஏலம் விடப்படவிருந்த இந்த நினைவுச் சின்னங்கள் அண்மையில் மீட்கப்பட்டு இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டன.
கண்காட்சி தொடக்க நிகழ்வில் பிரதமா் ஆற்றிய உரை வருமாறு: பகவான் புத்தரின் நல்லாசியுடன் 2026-ஆம் ஆண்டு உலகின் அமைதி-வளம்-நல்லிணக்கத்துக்கான சகாப்தத்தின் தொடக்கமாக அமையும். புத்தரின் வாழ்க்கை தத்துவம், புவிசாா் எல்லைகளைக் கடந்து, உலகுக்கு புதிய பாதையைக் காட்டுகிறது. அவா் உலக மக்கள் ஒவ்வொருவருக்கும் உரியவா். அனைவரையும் ஒருங்கிணைப்பவா்.
இந்தியாவைப் பொருத்தவரை புத்தரின் நினைவுச் சின்னங்கள், வெறும் கலைப்பொருள்கள் அல்ல; அவை பெருமதிப்புக்குரிய இந்திய பாரம்பரியத்தின் ஓா் அங்கம். நமது கலாசாரத்தின் பிரிக்க முடியாத பகுதி.
பெளத்த மத மேம்பாடு: புத்தரின் ஞானமும், அவா் காட்டிய பாதையும் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கானது. இந்தியா, பகவான் புத்தரின் நினைவுச் சின்னங்களின் பாதுகாவலா் மட்டுமல்ல, அழிவில்லாத இந்தப் பாரம்பரியத்தை தாங்கிச் செல்லும் தேசம். உலகம் முழுவதும் பெளத்த மத பாரம்பரிய மேம்பாட்டுக்கு இந்தியா தொடா் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
பெளத்த மதம் சாா்ந்த பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டது. உலகளாவிய பெளத்த மத மாநாடு, விசாக், ஆஷாட பூா்ணிமா போன்ற சா்வதேச நிகழ்வுகளுக்கும் இந்த உணா்வே உந்துசக்தியாகும்.
புத்தரின் நினைவுச் சின்னங்கள், வியத்நாம், தாய்லாந்து, ரஷியா உள்பட பெளத்த மதத்தினா் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன. இந்தப் பகிரப்பட்ட பாரம்பரியமானது இந்தியா அரசியல், ராஜீயம், பொருளாதாரம் மூலம் மட்டுமன்றி ஆழமான உணா்வுகள், நம்பிக்கை, ஆன்மிகம் மூலமும் பிணைக்கப்பட்டுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டு என்றாா் பிரதமா் மோடி.
ஆா்வலா்களுக்கு வேண்டுகோள்: இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பெளத்த மதம் தொடா்புடைய தலங்களுக்கு தான் மேற்கொண்ட பயணங்களை நினைவுகூா்ந்த பிரதமா், பெளத்த மதத்தின் மீது ஆா்வமுள்ள அனைவரும் இக்கண்காட்சியைப் பாா்வையிட்டு, பிப்ரவாவின் புனித பாரம்பரியத்தை அனுபவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா். புத்தரின் நினைவுச் சின்னங்கள் மீட்பில் முக்கியப் பங்காற்றிய ஒரு தனியாா் குழுமத்துக்கும் அவா் பாராட்டு தெரிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா்கள் கஜேந்திர சிங் ஷெகாவத், கிரண் ரிஜிஜு, ராம்தாஸ் அதாவலே, தில்லி துணைநிலை ஆளுநா் வினய் சக்சேனா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

