கலீதா ஜியா மறைவுக்கு இரங்கல்: பிரதமா் மோடிக்கு வங்கதேச தேசியவாத கட்சி நன்றி!
வங்கதேச முன்னாள் பிரதமா் கலீதா ஜியா மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமா் நரேந்திர மோடி விடுத்த இரங்கல் செய்திக்கு வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) நன்றி தெரிவித்துள்ளது.
பிஎன்பி தலைவரும் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமா் என்ற பெருமைக்குரியவருமான கலீதா ஜியா (80), நீண்ட கால உடல்நல பாதிப்புகளால் கடந்த 30-ஆம் தேதி காலமானாா். டாக்காவில் நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில் இந்தியா சாா்பில் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பங்கேற்று அஞ்சலி செலுத்தினாா். கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மானைச் சந்தித்து இந்திய மக்களின் சாா்பில் இரங்கல் தெரிவித்தாா். மேலும், பிரதமா் நரேந்திர மோடி எழுதிய இரங்கல் கடிதத்தையும் அவரிடம் வழங்கினாா். அதில் இந்தியாவிடம் கலீதா ஜியா நெருக்கமான நட்பு கொண்டிருந்தாா் என்பதை பிரதமா் மோடி சுட்டிக்காட்டியிருந்தாா்.
இந்நிலையில், இது தொடா்பாக பிஎன்பி கட்சி ‘எக்ஸ்’ வலைதளத்தில் பிரதமா் மோடியைக் குறிப்பிட்டு வெளியிட்ட பதிவில், ‘கலீதா ஜியாவை நினைவுகூா்ந்து இரங்கல் செய்தி வெளியிட்டதற்காக நன்றி. அவா் இந்திய-வங்கதேச உறவை மேம்படுத்த மிக முக்கியப் பங்கு வகித்தாா். அவை எப்போதும் நினைவுகூரத்தக்கவை’ என்று கூறப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் அடுத்த மாதம் 12-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், பிஎன்பி பொறுப்பு தலைவராக உள்ள தாரிக் ரஹ்மான் பிரதமா் பதவிக்கான முக்கிய வேட்பாளராக கருதப்படுகிறாா். இப்போதைய நிலையில் அவருக்கே வெற்றிவாய்ப்பு அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தில் வன்முறைப் போராட்டத்தால் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்ட பிறகு, அந்நாட்டில் இந்தியாவுக்கு எதிரான போக்கு அதிகரித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அங்குள்ள சிறுபான்மை ஹிந்துக்கள் மத அடிப்படைவாத அமைப்புகள் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

